

காசா: ‘அண்டை நாடுகளை (வளைகுடா நாடுகள்) இலக்கு வைப்பதை ஈரான் நிறுத்த வேண்டும். அதேவேளையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது’ என பாலஸ்தீனிய இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க, சாத்தியமான அனைத்து வழிகள் மூலமும் பதிலடி கொடுக்கும் உரிமையை ஈரான் இஸ்லாமியக் குடியரசு கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அண்டை நாடுகளை (வளைகுடா நாடுகள்) இலக்கு வைப்பதைத் தவிர்க்குமாறு ஈரானில் உள்ள சகோதரர்களை எங்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேலுடன் இரண்டு ஆண்டுகள் நீடித்த, மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்திய போரை நடத்திய ஹமாஸ் இயக்கம், தற்போது நடைபெற்று வரும் இந்தப் போரை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தியது.
முன்னதாக, ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி போரில் கொல்லப்பட்டதை, ஹமாஸ் இயக்கம் ‘ஒரு கொடுமையான குற்றம்’ என்று கண்டித்தது. அந்த கண்டனத்தில், ‘எங்கள் மக்களுக்கும், எங்கள் நோக்கத்திற்கும், எங்கள் எதிர்ப்புப் போராட்டத்துக்கும் தேவையான அனைத்து வகையான அரசியல், ராஜதந்திர மற்றும் ராணுவ ஆதரவையும் அவர் வழங்கினார்’ என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே இன்று 14-வது நாளாக போர் நீடித்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.