தெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து இதுவரை ஈரானில் 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு உள்ளான நடான்ஸ் அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டதாக பரவும் தகவலால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு வெளியிட்ட தகவலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில் இதுவரை ஈரானில் 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஈரான் முழுவதும் 153 நகரங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இன்று (மார்ச் 3) ஈரானின் நடான்ஸ் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் (FEP) நுழைவு கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சில சேதங்கள் ஏற்பட்டதாக கூறியது. ஆனாலும், நடான்ஸ் ஆலையில் கதிரியக்க விளைவுகளோ அல்லது வேறு ஏதும் தாக்கமோ கண்டறியப்படவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், அப்பகுதியில் பதற்றம் மேலோங்கியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இன்று புதிய அலைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சிக்கித் தவிக்கும் பயணிகளை திரும்ப அழைத்து வருவதற்காக இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களும் வளைகுடா நாடுகளான மஸ்கட், ஓமன், ஜெட்டா உள்ளிட்ட நாடுகளுக்கான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
துபாய் மற்றும் அபுதாபி விமான நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதாக அறிவித்தன.
நான்காவது நாளாகப் போர் நடந்து வரும் நிலையில், இன்று (மார்ச் 3) இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது தாக்குதல்களைத் தொடங்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், இஸ்ரேல் ராணுவம் இன்று ஈரானின் அதிபர் அலுவலகம் மற்றும் தெஹ்ரானில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக கூறியது.
இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து தனது தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி உள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கர்களை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் இளவரசர் சபா அல் காலித் அல் ஹமாத் அல் முபாரக் அல் சபா ஆகியோருடன் தனித்தனியே தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“வளைகுடா பிராந்தியத்தின் இரண்டு முக்கிய தலைவர்களுடன் பிரதமர் இன்று பிற்பகல் பேசினார். ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்டார். மேலும் குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபா அவர்களுடனும் பேசினார்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்தியா கூறுவது என்ன?
அதேவேளையில், ‘கடந்த சில நாட்களில் மோதல் தீவிரமடைந்ததோடு, அது பிற நாடுகளுக்கும் பரவியுள்ளதை நாம் பார்க்கிறோம். அழிவும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பொருளாதார செயல்பாடுகளும் தடைபட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் முக்கிய அக்கறை கொண்ட அண்டை நாடு என்ற வகையில், நடைபெற்று வரும் சம்பவங்கள் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
வளைகுடா பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பும் நலனும் மிக மிக முக்கியம். அவர்களுக்கு பாதகமாக இருக்கும் எந்தப் போக்கையும் நாம் புறக்கணிக்க முடியாது. இந்தியாவின் வர்த்தகமும் எரிசக்தியை வழங்கும் சங்கிலிகளும் இந்தப் பிராந்தியத்தோடு தொடர்புடையவை. பெரிய அளவிலான எந்தவொரு இடையூறும் இந்திய பொருளாதாரத்திற்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வணிகக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்தியா உறுதியாக எதிர்க்கிறது. கடந்த சில நாட்களில், இத்தகைய தாக்குதல்களின் விளைவாக சில இந்தியர்கள் உயிரிழந்ததோடு, சிலர் காணாமல் போயுள்ளனர்.
இந்தப் பின்னணியில், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பத்கான அழைப்பை இந்தியா வலுவாக மீண்டும் முன்வைக்கிறது. மோதல் விரைவாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் தெளிவாக குரல் எழுப்புகிறோம்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.