மத்திய கிழக்கு மோதலை விரைந்து முடிவுக்கு கொண்டுவர இந்தியா வலியுறுத்தல்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நிகழ்ந்த தாக்குதல்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நிகழ்ந்த தாக்குதல்

Updated on
2 min read

புதுடெல்லி: புனித ரமலான் மாதத்தில் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் மோதல் தீவிரமடைவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள இந்தியா, இந்த மோதலை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் மோதல் தொடங்கியபோது, இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருந்தது.

அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, பதற்றம் அதிகரிக்காமல் தவிர்த்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று இந்தியா அப்போது வலியுறுத்தியது. எனினும், புனித ரமலான் மாதத்தில், அந்தப் பிராந்தியத்தில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

கடந்த சில நாட்களில் மோதல் தீவிரமடைந்ததோடு, அது பிற நாடுகளுக்கும் பரவியுள்ளதை நாம் பார்க்கிறோம். அழிவும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பொருளாதார செயல்பாடுகளும் தடைபட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் முக்கிய அக்கறை கொண்ட அண்டை நாடு என்ற வகையில், நடைபெற்று வரும் சம்பவங்கள் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

வளைகுடா பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பும் நலனும் மிக மிக முக்கியம். அவர்களுக்கு பாதகமாக இருக்கும் எந்தப் போக்கையும் நாம் புறக்கணிக்க முடியாது. இந்தியாவின் வர்த்தகமும் எரிசக்தியை வழங்கும் சங்கிலிகளும் இந்தப் பிராந்தியத்தோடு தொடர்புடையவை. பெரிய அளவிலான எந்தவொரு இடையூறும் இந்திய பொருளாதாரத்திற்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வணிகக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்தியா உறுதியாக எதிர்க்கிறது. கடந்த சில நாட்களில், இத்தகைய தாக்குதல்களின் விளைவாக சில இந்தியர்கள் உயிரிழந்ததோடு, சிலர் காணாமல் போயுள்ளனர்.

இந்தப் பின்னணியில், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பத்கான அழைப்பை இந்தியா வலுவாக மீண்டும் முன்வைக்கிறது. மோதல் விரைவாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் தெளிவாக குரல் எழுப்புகிறோம். ஏற்கெனவே பலர் உயிரிழந்துள்ளனர். அதற்காக நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களும் துணைத் தூதரகங்களும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. மோதல் காரணமாக சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவை வழங்கியுள்ளன. இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பல்வேறு தூதரக அம்சங்களைச் சமாளிக்க அவை தொடர்ந்து செயல்படும்.

அந்தப் பிராந்திய அரசுகளுடனும், பிற முக்கிய கூட்டாளர்களுடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் தலைவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். நிலைமையை தொடர்ச்சியாகவும், நெருக்கமாகவும் கண்காணித்து வரும் அரசு, தேசிய நலனுக்கேற்ப தேவையான முடிவுகளை எடுத்து வருகிறது; தொடர்ந்து எடுக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நிகழ்ந்த தாக்குதல்</p></div>
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in