மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
Updated on
1 min read

புதுடெல்லி: ஓமன், குவைத் நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய நிலையில், பதிலுக்கு இஸ்ரேலுக்கு எதிராகவும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகவும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ட்ரோன்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகமும், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகமும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகின.

இந்நிலையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் இளவரசர் சபா அல் காலித் அல் ஹமாத் அல் முபாரக் அல் சபா ஆகியோருடன் தனித்தனியே தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“வளைகுடா பிராந்தியத்தின் இரண்டு முக்கிய தலைவர்களுடன் பிரதமர் இன்று பிற்பகல் பேசினார். ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்டார். மேலும் குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபா அவர்களுடனும் பேசினார்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல் பின்னணியில், அந்த நாடுகளில் நடந்த தாக்குதல்கள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உரையாடல்களின்போது, அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

முன்னதாக, பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிபா, சவூதி அரேபிய இளவரசர் முகம்மதுபின் சல்மான் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். அப்போது, அந்நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் கண்டித்தார். இந்த கடினமான நேரத்தில் அந்நாட்டு மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்பதாக அவர் தெரிவித்தார்.

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் சூழல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். ஐக்கிய அபு அமீரக தலைவர் முகம்மது பின் ஜாயெத் அல் நயான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருடனும் பிரதமர் மோடி உரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
ஈரானின் தீவிரத் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in