ஐரோப்பிய நாடுகளை சுட்டெரிக்கும் ‘ஒமேகா பிளாக்’ - வெப்ப அலையும் தாக்கமும் எத்தகையது?

பிரான்ஸில் 10 நாட்களில் 1,400 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளை சுட்டெரிக்கும் ‘ஒமேகா பிளாக்’ - வெப்ப அலையும் தாக்கமும் எத்தகையது?
Updated on
4 min read

ஐரோப்பாவின் மேற்குப் பகுதி நாடுகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்களால் தாங்க முடியாத அளவுக்கு கொடுமையான வெயில் வாட்டி வருகிறது. பிரான்ஸில் மட்டும் கடந்த 10 நாட்களில் வெப்ப அலைக்கு 1,400 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 21-ம் தேதி பிரான்ஸ், ஸ்பெயினில் தொடங்கிய இந்தக் கொடூரமான வெப்பம் தற்போது ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, போலந்து, செக். குடியரசு, ஸ்லோவோகியா, பிரிட்டன் வரை நீண்டுள்ளது. 40 டிகிரி சென்சியஸுக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

பிரான்ஸின் பல்வேறு நகரங்களை கொடும் வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. சில நகரங்களில் அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியல் வரை வெப்பம் நீடிப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் நாடுகள் ஆண்டின் பெரும்பகுதி காலம், குளிர் மற்றும் உறைபனி ஆகியவற்றிலேயே இருக்கும். கோடை காலத்தில் மட்டும் இங்கு வெயில் இருக்கும். அதுவும் உடலுக்கு இதமான வகையில்தான் வெப்பம் இருக்கும். இதனால், இந்த நாடுகளில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள், குளிரைத் தாங்கும் வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

இரவிலும் வெளுக்கும் வெப்பம்

வெயில் பெரிதாக இருக்காது என்பதால் ஏ.சி.-க்கும் பெரிதாக எந்த வீட்டிலும், அலுவலகத்திலும் வேலையில்லை. ஆனால், இப்போது நிலவும் கொடும் வெயிலை சமாளிக்க, வீட்டுக்குள் ஏ.சி. கூட பொருத்திக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டின் உத்தரத்தில் மின்விசிறி பொருத்த வசதி இல்லாததால், டேபிள் மின்விசிறிகளை நம்பி மக்கள் உள்ளனர்.

பிரிட்ஜ், அணு உலை, ரயில் போக்குவரத்து ஆகியவற்றின் இயக்கம் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் வெயில் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு சூப்பர் மார்கெட்டுகளில் பிரிட்ஜ் (குளிர்சாதனப் பெட்டி) வேலை செய்யாமல் பழுதாகிவிட்டால் பால், இறைச்சி, பன்னீர், பாலாடை போன்றவற்றின் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதைவிடக் கொடுமையாக ஜெர்மனி, பிரான்சிஸ் இரவு நேரத்தில் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நீடிப்பதால், மக்கள் தூங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பகல் நேரத்தில் வெயில் 41 டிகிரி செல்சியஸும், இரவில் 30 டிகிரி வரையும் இருப்பதாக ஜெர்மன் வெதர் சேவை தெரிவித்துள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் தார்ச் சாலைகள் வெப்பத்தால் உருகி நிற்பதும், போக்குவரத்து சிக்னல்களுக்கு பயன்படுத்தப்படும் விளக்குகள் வெப்பத்தால் வளைந்துவிட்டதும், வெயிலில் வெறும் கடாயில் ஆம்லேட் சமைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், அங்கு நிலவும் கடும் வெப்பத்தையும், தாங்க முடியாத வெப்ப அலை குறித்தும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் பல வீடியோக்களையும், ரீல்ஸ்களையும் பதிவிட்டுள்ளனர்.

தாங்க முடியாத வெயிலுக்கு என்ன காரணம்?

ஐரோப்பாவைச் சேர்ந்த வேர்ல்ட் வெதர் அட்ரிபியூஷன் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கையில் “ஐரோப்பாவில் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் வெப்பஅலை மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பத்தோடு சேர்த்து, காற்று இல்லாமல் ஈரப்பதம் மட்டும் சேர்ந்துள்ளதால், மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த அளவு காலநிலை மோசமானதற்கு மனிதத் தவறால் உருவான காலநிலை மாறுபாடுதான் காரணம்.

இந்த வெப்பநிலை நிலவரம் 5 தசாப்தங்களுக்கு முன்பு நடைமுறையில் சாத்தியமற்றதாக இருந்திருக்கும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நிகழ்வதற்கான வாய்ப்பு 200 மடங்கு அதிகமாகிவிட்டது.

மனிதர்களால் நேர்ந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக, வெப்ப அலையின் வீச்சும், தீவிரத்தன்மையும் அதிகரிக்கும். பசுமை இல்ல வாயு (கார்பன்டை ஆக்ஸைடு) வெளியேற்றம், குறிப்பாக நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாடு, எரிவாயு பயன்பாடு ஆகியவை பூமியின் வெப்பத்தை அதிகப்படுத்திவிட்டது. பூமியின் இயல்பு வெப்பத்தைவிட 1.3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்டது.

அதிலும் தொழிற்சாலைகள் வளர்ந்த நாடுகளில் உருவாகி பசுமை இல்ல வாயுக்களை வெளியிடத் தொடங்கியபின், இயற்கை மோசமடைந்து மாற்றம் அடைந்து, இதுபோன்ற அதிவெப்ப நிலைக்கு சூழலை மாற்றிவிட்டது. மனிதர்கள் தாங்க முடியாத அளவு வெயிலை ஐரோப்பிய மக்கள் தற்போது அனுபவித்து வருகிறார்கள்.

காலநிலை மாற்றம் காரணமாகத்தான் ஐரோப்பிய மக்கள் வழக்கமான வெப்பத்தைவிட கூடுதலாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அனுபவித்து வருகிறார்கள். ‘ஒமேகா பிளாக்’ (Omega Block) காரணியும் சேரும்போது வெப்பத்தின் தீவிரத்தன்மை மேலும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.

‘ஒமேகா பிளாக்’ என்றால் என்ன?

‘ஒமேகா பிளாக்’ என்பது இரு குளிர் குறைந்த அழுத்த மண்டலங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட வெப்பமான மற்றும் உயர் அழுத்தப் பகுதியாகும். இது கிரேக்க எழுத்தான ‘Ω’ ஒமேகா போன்று இருப்பதால் இதற்கு ‘ஒமேகா பிளாக்’ என்று அழைக்கிறார்கள். இது காற்றைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, காற்றோட்டத்தைத் தடுக்கும் ‘Ω’ (ஒமேகா) வடிவ அமைப்பாகும். இதனால் வெப்பம் தேங்கி, அனல் காற்று அடித்து, மக்களை மூச்சுத்திணற வைக்கிறது.

இதில் ‘பிளாக்’ என்பது வெப்பமான காற்று அழுத்தம், வெளியேற முடியாமல் ஓர் இடத்தில் தேங்கி நிற்பதாகும். வழக்கமாக காற்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும். ஆனால், ஒமேகா பிளாக் காரணமாக, காற்று செல்லுதலில் தடைபட்டு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசி, அழுத்தப் பகுதிகளை தனித்துவிடுகிறது.

காற்றை வழிநடத்தும் போக்கும் பலவீனமாக இருப்பதாலும், அதிகரிக்கும் வெப்பமும், இந்த மெதுவான நகர்தலுக்கு காரணமாகியுள்ளன.

இதனால், வெப்பமான மற்றும் அசைவற்ற காற்று குறிப்பிட்ட பகுதி மீது தங்கி விடுகிறது. இதற்கு பெயர்தான் ஒமேகா பிளாக். இது பொதுவாக 3 முதல் 10 நாட்கள் வரை நீடித்தாலும், சில நேரங்களில் வாரக் கணக்கில்கூட நீடிக்கலாம்.

அதாவது, ஐரோப்பாவின் மேற்கு பகுதி நாடுகளை வெப்பம் வாட்டியெடுக்காமல் முன்பு இருந்ததற்கு காரணம், அட்லாண்டிக் பகுதியில் இருந்து தடையில்லா குளிர் காற்று வீசியதுதான். ஆனால், ஒமேகா பிளாக்கின்போது, அட்லாண்டிக் பகுதியில் இருந்து குளிர்ந்த காற்றுத் தொகுதிகள் இப்பகுதிக்குள் நகர்வதைத் தடுக்கிறது. உயர் அழுத்த மண்டலம் இருப்பதால் மேகங்கள் மற்றும் மழை உருவாவதையும் தடுக்கிறது. இதனால், பல நாட்கள் மற்றும் வாரங்களுக்குச் சூரிய ஒளி தொடர்ந்து நிலப்பரப்பை வெப்பமடையச் செய்கிறது. மழையின்றி, வானம் தெளிவாக இருக்கவைக்கும். இதனால் இரவு நேரத்தில்கூட காலநிலை குளிராக இருக்கவிடாமல் வெப்பம் அலையும், காற்றும் தடுகின்றன.

இந்த ஒமேகா பிளாக்கால் எல்நினோ, லாநினோ போன்ற காரணிகளும் தீவிரமாகலாம். அடுத்துவரும் நாட்களில் ஐரோப்பாவின் மேற்கு நாடுகளை வாட்டி வதைத்து வரும் வெயில், கிழக்குப் பகுதி நாடுகளுக்கும் பரவி, வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்.

ஒமேகா பிளாக்கின்போது என்ன நடக்கும்?

இரு குளிர்ந்த மண்டலங்களுக்கு நடுவே உயர் அழுத்தம் கொண்ட வெப்பம் நீடிப்பதால், மிகுந்த வறட்சியாகவும், வெப்பமும் இயல்புக்கு அதிகமாகவும் இருக்கிறது. இந்த உயர் அழுத்தம்தான், மழை பெய்ய துணையாக இருக்கும் மேகக் கூட்டத்தை கூடவிடாமல் தடுத்து, வானத்தை தெளிவாக வைத்து, வெப்பத்தை உயர்வாகவே வைத்திருக்கிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைக் கடந்து சென்றுவிட்டது. குளிர்ந்த காற்று பகுதிக்கும், வெப்பமான அதிக அழுத்ததுக்கு வடமேற்கே பிரிட்டன் அமைந்துள்ளது. இதனால், பிரிட்டனின் தெற்கு மற்றும் கிழக்குப்பகுதி (ஸ்காட்லாந்து, நெதர்லாந்து) ஆகியவற்றில் குளிர்ந்த, ஈரப்பதமான சூழல் நிலவுகிறது, மேற்குப் பகுதியில் கடும் வெப்பம் நீடிக்கிறது.

‘ஹீட் டோம்’ விளைவு என்றால் என்ன?

பெங்களூருவில் உள்ள சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கான கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் கிருஷ்ண ராஜ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஐரோப்பிய கிழக்கு, மேற்கு நாடுகளை அளவுக்கு அதிகமான வெப்பம் வாட்டி வதைத்து வருவதற்கு ‘ஹீட் டோம்’ விளைவுதான் காரணம். வளிமண்டலத்தின் மேலடிப்பில் உயர் அழுத்தம் கொண்ட வெப்பக் காற்று சிக்கிக் கொள்வதால் ஏற்படுகிறது. வளிமண்டலத்தின் மேல் பகுதியில் நிலவும் ஒரு நிலையான உயர் அழுத்தப் பகுதியாகும். பாத்திரத்தின் மூடியைப் போல ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்தார்.

அடுத்து என்ன நடக்கும்?

உலக வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கையில் ‘அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இயற்கை சீற்றங்களில் வெப்ப அலைகள் முக்கியமானது. இது இப்போது பெருகி பல்வேறு நாடுகளில் அடிக்கடி தீவிரமாக ஏற்படுகிறது. இதனால் சுகாதாரம், விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் தொழிலாளர் உற்பத்தித் திறன் ஆகியவற்றுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள வெப்ப அலை இனிவரும் காலங்களில் படிப்படியாகக் குறைந்து, கிழக்குப் பகுதி நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மத்திய ஐரோப்பா, பால்கன்ஸ் பகுதியை நோக்கி ஒமேகா பிளாக் நகரும். கடந்த வாரங்களில் இருந்ததைவிட, இன்னும் தீவிரமான வெப்பத்தை மக்கள் அனுபவிக்க வேண்டியதிருக்கும். அதிவெப்பம், வெப்ப அலையால் முதியோர், குழந்தைகள், தீவிர துணைநோய் இருப்போர், நோயாளிகள் ஆகியோர் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளை சுட்டெரிக்கும் ‘ஒமேகா பிளாக்’ - வெப்ப அலையும் தாக்கமும் எத்தகையது?
பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in