

லண்டன்: எகிப்து நாட்டை சேர்ந்தவர் காலித் ஷெரீப். இவரது பெற்றோர் எகிப்தில் இருந்து கத்தார் நாட்டில் குடியேறினர். அங்கு பள்ளிப் படிப்பை நிறைவு செய்த காலித் தன்னுடைய 18-வது வயதில் உயர் கல்விக்காக பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சென்றார்.
லண்டனின் புறநகர் பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். இlற்காக அவர் மொத்தம் ரூ.1.04 கோடியை செலவு செய்து உள்ளார். இதன் பிறகு பிரிட்டனில் ஏதாவது ஒரு வேலையில் சேர திட்டமிட்ட காலித் இதுவரை 500-க்கும் மேற்பட்ட பணிகளுக்காக விண்ணப்பித்தார். ஆனால் 20 நிறுவனங்கள் மட்டுமே அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தன. அதிலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆனாலும் பிரிட்டனில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனக்கே இந்த நிலை என்றால், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களின் நிலை இன்னமும் மோசமாக இருக்கிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு சூப்பர் மார்க்கெட்டில் எளிதாக வேலை கிடைக்கிறது. ஆனால் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. நீண்ட தேடலுக்குப் பிறகு சொந்தமாக ஜவுளி நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளேன். அதோடு பகுதிநேர வீடியோகிராபர், புகைப்பட கலைஞராகவும் பணியாற்றி வருகிறேன். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.