

மம்தா பானர்ஜி | கோப்புப் படம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை அம்மாநிலத்தில் உள்ள 5 முக்கியமான மாவட்டங்கள் தீர்மானிக்கவுள்ளன என்று தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் இன்று (ஏப்ரல் 29) 2-ம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பது 5 மாவட்ட தொகுதிகளின் முடிவுகள்தான் என்று தெரியவந்துள்ளன. கொல்கத்தா, ஹவுரா, 24 வடக்கு பர்கானாஸ், 24 தெற்கு பர்கானாஸ், நாடியா ஆகிய 5 மாவட்டங்கள்தான் அவை.
இந்த மாவட்டங்களில் அதிக தொகுதிகளை வெல்பவர்கள்தான் ஆட்சியில் அமர்ந்து வருவது கடந்த கால வரலாறாக உள்ளது. கடந்த 2011 பேரவைத் தேர்தலில் இந்த மாவட்டங்களில் உள்ள 108 தொகுதிகளில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 82 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது.
2016 தேர்தலின்போது இந்த 5 மாவட்டங்களில் 91 இடங்களையும், 2021-ம் ஆண்டு தேர்தலில் 97 இடங்களையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
எனவே, இந்தத் தேர்தலிலும் இந்த 5 மாவட்டங்களில் பெருவாரியான தொகுதிகளை வெல்லும் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு, சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக கடும் சவால் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், ஏயுஜேபி கட்சிகளும் கடும் சவாலை அளித்து வருகின்றன.