Published : 02 Sep 2017 08:57 AM
Last Updated : 02 Sep 2017 08:57 AM

உலக மசாலா: கம்பளி ஓவியங்கள்!

மெரிக்காவின் ஆர்கன்சாஸ் பகுதியில் வசிக்கும் டேனி ஈவ்ஸ், ‘கம்பளி ஓவியம்’ தீட்டுவதில் சிறந்தவராக இருக்கிறார். ஊசியையும் கம்பளியையும் வைத்து, நிஜமான விலங்குகளையும் பறவைகளையும்போல் உருவாக்கிவிடுகிறார். “எனக்கு ஓவியம், கலைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். நான் வாழ்ந்த சூழலும் இயற்கை எழில் நிரம்பியது. தாவரவியல், சூழலியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றேன். ஸ்ப்ரிங்ஃபீல்ட் உயிரியல் பூங்காவில் வேலை கிடைத்தது. விலங்குகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் முப்பரிமாண ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருந்தேன். பிறகு கம்பளியை வைத்து ஓவியம் தீட்டுவதை நானாகவே உருவாக்கினேன். இவற்றைப் படங்களாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. அதனால் வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக கம்பளி ஓவியங்களில் இறங்கினேன். ஒரு ஓவியத்தின் விலை சுமார் 2 ஆயிரம் ரூபாய். ஆன்லைனில் ஓவிய வகுப்புகளும் எடுக்கிறேன்” என்கிறார் டேனி ஈவ்ஸ்.

நிஜம்போல் தோற்றமளிக்கும் கம்பளி ஓவியங்கள்!

20

ஆண்டுகளுக்கு முன்பு கோஸ்டா ரிகாவிலுள்ள இரண்டு சூழலியலாளர்கள், மிகப் பெரிய ஆரஞ்சு பழச்சாறு உற்பத்தியாளரிடமிருந்து சிறிது நிலத்தை தேசியப் பூங்காவுக்காகப் போராடிப் பெற்றனர். தானம் கொடுத்த நிலத்துக்குப் பதிலாக, இந்த இடத்தில் ஏதாவது செய்து புதுமை செய்து காண்பிக்க வேண்டும் என்று ஒப்பந்தம். ஆனால் அந்த உரிமையாளர், ஆரஞ்சு கழிவுகளை எல்லாம் தானம் கொடுத்த இடத்தில் கொட்டிக்கொண்டிருந்தார். நன்கொடையாகப் பெற்ற டேனியலுக்கும் அவரது மனைவி வின்னிக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. டன் கணக்கில் குவிந்த கழிவுகளை எரிப்பதற்கோ, அப்புறப்படுத்துவதற்கோ இயலவில்லை. தானம் பெறப்பட்ட காலம் முடிந்தது. அடுத்த 15 ஆண்டுகள் ஆரஞ்சு கழிவுகள் கொட்டப்பட்ட நிலம் எப்படி இருக்கிறது என்று ஒருவரும் கவனிக்கவில்லை. பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டிமோதி ட்ரியரிடம் டேனியல் அந்த இடம் பற்றிச் சொன்னார். இருவரும் அந்த இடத்தைப் பார்க்கச் சென்றனர். அங்கே அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலத்தில் இப்போது பசுமையான மரங்கள் நின்றுகொண்டிருந்தன! கொட்டப்பட்ட கழிவுகள் எல்லாம் உரமாகி, மண்ணுக்கு ஊட்டச்சத்தை வழங்கியிருக்கின்றன. ஆரஞ்சு கழிவு உரமாக மாறியிருந்த நிலத்துக்கும் சாதாரண நிலத்துக்கும் பார்க்கும்போதே பெரிய அளவில் வித்தியாசம் தெரிந்தது. உடனே பல்கலைக்கழக்த்திலிருந்து ஓர் ஆராய்ச்சிக் குழு அந்த இடத்துக்கு வந்துசேர்ந்தது. “இந்த நிலத்தைச் சுற்றிலுமுள்ள நிலங்களில் பாறைகளும் காய்ந்த புற்களும்தான் இருக்கின்றன. ஆனால் கழிவு கொட்டப்பட்ட இடத்தில் பசுமையான காடு மீண்டும் உருவாகிவிட்டது. இங்குள்ள மண்ணில் அதிக அளவில் சத்துகள் இருக்கின்றன. தாவரங்கள் செழித்து வளர்கின்றன. எதற்கும் பயன்படாத நிலத்தில் காடுகளை உருவாக்க முடியும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்தக் காடு எங்களுக்குள் மிகப் பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது” என்கிறார் விஞ்ஞானி ஜொனாதன் சோய்.

பாழ் நிலத்தையும் பசுமையாக்க முடியும் என்று நிரூபணமாகியிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x