Published : 30 Mar 2023 09:47 AM
Last Updated : 30 Mar 2023 09:47 AM

ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரம்: ஜனநாயகத்தை நம்புவதாக ஜெர்மனி கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, "இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல் காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டியவரை, ராகுல் காந்தி நீதிமன்றத்தைத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு வந்தபின்னரே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா என்பதெல்லாம் தெளிவாகும். அந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், "நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம். நாங்கள் ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயக மாண்பைப் பேணுவது, கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது போன்றவற்றில் இந்தியா அமெரிக்கா ஒருமித்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது. மனிதநேயத்தைப் பேணுதல் என்பது இருநாடுகளில் ஜனநாயகக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா நல்லுறவைப் பேணும் நாடுகளின் எதிர்க்கட்சிகளுடனும் சுமுக உறவைப் பேணவே விரும்புகிறது" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை தீர்ப்பையடுத்து வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x