Published : 02 Jan 2023 09:13 AM
Last Updated : 02 Jan 2023 09:13 AM

2023 உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்தான்: சர்வதேச நிதியம் கணிப்பு

கிறிஸ்டலினா ஜார்ஜீவா

2023 உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்தான் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அளித்தப் பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவருடைய பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

2023 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்துக்கு சற்று கடினமான காலம் தான். அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொருளாதார செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நலிவடைந்து வருவதே இதற்குக் காரணம்.

கடந்த வாரம் நான் சீனா சென்றிருந்தேன். அங்கே கரோனா தொற்றே இல்லாத பபுள் ஜோனுக்கு சென்றேன். ஆனால் பயணத் தளர்வுகள் செயல்பாட்டுக்கு வந்தபின்னர் தொற்று பரவலைத் தடுக்க முடியாது. அடுத்த 2 மாதங்கள் சீனாவுக்கு மிகவும் கடினமான காலம். சீனப் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படலாம். அந்த எதிர்மறை விளைவுகள் சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம்.

ஆனால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியையோ அல்லது மந்தநிலையையோ தவிர்க்கும் சூழலே இருக்கிறது. காரணம் அங்கு தொழிலாளர் சக்தி இன்னும் வலுவாகவே இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் சர்வதேச நிதியம் 2023ல் உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பில் உக்ரைன் போர், உலகம் முழுவதும் நிலவும் பணவீக்க அழுத்தங்கள், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிப்பதால் சர்வதேச அளவில் மந்தநிலை ஏற்படும் என்றே கூறியிருந்தது.

சீனாவின் நெருக்கடி எதனால்? 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானது.

அதன்பின்னர் சீனா தனது ஜீரோ கோவிட் கொள்கையை சற்று தளர்த்த ஆரம்பித்தது. ஜனவரி 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்து உள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிபர் ஜி ஜின்பிங் தனது புத்தாண்டு உரையில் சீனா புதிய அத்தியாயத்தில் அடிவைக்கும் இவ்வேளையில் மக்களின் ஒற்றுமையும், உழைப்பும் தேவை என்று கூறியிருந்தார். 40 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2022ல் சராசரி அல்லது சராசரிக்கும் குறைவான நிலையை எட்டவிருக்கிறது என்று பல்வேறு கணிப்புகளும் கூறுவதால் சீனா தளர்வுகளை அமல்படுத்திவருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x