Published : 28 Dec 2022 03:28 PM
Last Updated : 28 Dec 2022 03:28 PM

“என் தாயும் சகோதரியும் கற்க முடியாவிட்டால், எனக்கும் வேண்டாம்” - கல்விச் சான்றிதழ்களை கிழித்தெறிந்த ஆப்கன் பேராசிரியர்

காபூல்: "எனது தாயும், சகோதரியும் கல்வி கற்க முடியாவிட்டால், எனக்கு இந்தச் சான்றிதழ்கள் வேண்டாம்" எனக் கூறி தொலைக்காட்சி நேரலையில் ஆப்கன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழ்களை கிழித்தெறிந்த நிகழ்வு சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

அண்மையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், “ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த உத்தரவை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. தலிபான்கள் உத்தரவால் அந்நாட்டுப் பெண்கள் கடும் அதிருப்தியடைந்தனர். தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.

இந்நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் பேசும்போது, "இன்று முதல் எனக்கு எனது கல்விச் சான்றிதழ்கள் தேவையில்லை. இந்த நாட்டில் இனி கல்விக்கு இடமில்லை. எனது தாயும் சகோதரியும் படிக்க முடியாது என்றால் எனக்கும் கல்விச் சான்றிதழ்கள் தேவையில்லை" என்று உருக்கமாகக் கூறினார்.

அவ்வாறு சொல்லிக்கொண்டே அவர் தனது பட்டயப் படிப்புச் சான்றிதழ்களை கிழிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் அவர் சான்றிதழ்களை கிழித்து எறிகிறார். இந்தக் காட்சி அடங்கிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சரின் ஆலோசகர் ஷப்னம் நசிமி. அவர் தற்போது பிரிட்டனில் இருந்து செயல்படும் ஆப்கன் ஆதரவுக் குழுவின் இயக்குநராக உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். அங்கிருந்து நேட்டோ மற்றும் அந்நிய நாட்டுப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆட்சியைக் கவிழ்த்து தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் மிக மோசமான பொருளாதார, மனிதாபிமான நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தலிபான்கள் பிற்போக்குத்தனமான கெடுபிடிகளால் மக்களின் வாழ்க்கையை இன்னும் கொடூரமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சாட்சியாகத் தான் இந்த வீடியோ இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x