Published : 15 Dec 2022 07:52 PM
Last Updated : 15 Dec 2022 07:52 PM

செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம் என்று சொல்லும் நிறுவனம்

பிரதிநிதித்துவப் படம்

பெர்லின்: பெண்களின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை வசதி மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும் என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுதான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது.

எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம்தான் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை பெட்டிகள் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு செயற்கை கருப்பை பெட்டிகளும் குழந்தையின் இதயத் துடிப்பு, வெப்பநிலை, ரத்த அழுத்தம், சுவாசம் உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் அம்சங்களை கண்காணிக்கும் சென்சார்களை கொண்டுள்ளன. இது தொடர்பான வீடியோவையும் எக்டோலைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும், புற்றுநோய் மற்றும் பிற உடல் சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு செயற்கை முறையில் குழந்தை உருவாக்கும் முறை ஒரு தீர்வாக அமையும் என்றும் எக்டோ லைப் தெரிவிக்கிறது.

வாடகைத் தாய், செயற்கை கருவூட்டல் தற்போது வியாபார மயமாகியுள்ள சூழலில் எக்டோ லைப்பின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது எதிர்காலத்தில் நிச்சயம் சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x