Published : 15 Dec 2022 07:10 PM
Last Updated : 15 Dec 2022 07:10 PM

ஊழலில் உழலும் பாகிஸ்தான் ராணுவம்: முன்னாள் ராணுவத் தளபதி குடும்பம் குவித்த ரூ.1,270 கோடி

கமர் ஜாவெத் பாஜ்வா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக கமர் ஜாவெத் பாஜ்வா இருந்தபோது அவரது குடும்பம் ரூ.1,270 கோடி குவித்தது அம்பலமாகி உள்ளது.

பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு கொழுத்த சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதோடு, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. எனினும், அவர்கள் ராணுவத்திற்கு ஏற்ற விதத்தில் இல்லாமல், மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபடுவதாக ஏசியன் லைட் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாஸ்ட் ஃபோகஸ் இணையதளம், முன்னாள் ராணுவத் தளபதி கமர் ஜாவெத் பாஜ்வாவின் குடும்பத்தினர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,270 கோடி சொத்து குவித்திருப்பது குறித்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் 10வது ராணுவத் தளபதியாக பணியாற்றியவர் கமர் ஜாவெத் பாஜ்வா. கடந்த 2016, நவம்பர் 29ல் ராணுவத் தளபதியாக பதவியேற்ற இவர், கடந்த நவம்பர் 29ம் தேதி ஓய்வு பெற்றார். ஆறு ஆண்டுகள் இவர் ராணுவத் தளபதியாக இருந்துள்ளார். இந்நிலையில், இவர் ராணுவத் தளபதியாக இருந்தபோது இவரது குடும்பம் ரூ.1,270 கோடி குவித்துள்ளதாக ஃபாஸ்ட் ஃபோகஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. இவரது குடும்பத்தினரின் பொருளாதார பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்களை அது வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, கமர் ஜாவெத் பாஜ்வாவின் மனைவி ஆயிஷா அம்ஜத்தின் பெயரில் கடந்த 2016ல் எந்த சொத்தும் இல்லை என்றும், ஆனால், தற்போது அவரது பெயரில் ரூ.220 கோடிக்கு சொத்து உள்ளது என்றும் ஃபாஸ்ட் ஃபோகஸ் தெரிவித்துள்ளது. இது சட்டப்படி அறிவிக்கப்பட்ட மதிப்பு மட்டுமே என்றும் அது கூறியுள்ளது.

ஸ்விட்சர்லாந்து வங்கியான கிரிடிட் சூசி வங்கியில் முதலீடு செய்த 1,400 பாகிஸ்தானியர்களின் வங்கிக் கணக்குகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கசிந்தன. அதில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல்வாதிகள், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-ன் முன்னாள் தலைவர் அக்தர் அப்துர் ரகுமான் கான் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகளின் பெயர்கள் இருந்துள்ளன.

பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது புதிதல்ல என தெரிவித்துள்ளார் அந்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் ஜெ.எஸ்.சோதி. பாகிஸ்தான் ராணுவ ஜெனரலாக இருந்தவர், அமெரிக்காவில் ஏராளமான பிஸ்ஸா ஹட் கடைகளை திறந்த வரலாறு எல்லாம் ஏற்கெனவே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் அரசு நிலங்களை வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்த செய்திகள் ஏற்கெனவே வெளியாகி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x