Published : 15 Dec 2022 05:53 PM
Last Updated : 15 Dec 2022 05:53 PM

ஐ.நா.வின் பெண்கள் அமைப்பில் இருந்து ஈரான் அதிரடி நீக்கம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி

நியூயார்க்: அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா-வின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரானை நீக்கும் புதிய தீர்மானத்தை அமெரிக்கா புதன்கிழமை கொண்டு வந்தது. தீர்மானத்தில் செப்டம்பர் மாதம் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈரான் ஈடுபட்டது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 8 நாடுகளும் வாக்களித்தன. 16 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. முடிவில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பின்போது பேசிய ஐ.நா. பெண்கள் நல அமைப்புக்கான அமெரிக்க தூதர் லிண்டா, “பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பு உள்ளது. இந்த நேரத்தில் ஈரான் இதில் உறுப்பினர் என்பது ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு ஒரு கறையாகும்” என்றார்.

இந்த நிலையில், அமெரிக்கா கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானத்தை ஈரான் முற்றிலும் நிராகரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் தூதர் அமீர் சயீத் ஜலீல் பேசும்போது, “ஈரான் மக்கள் மீதான நீண்டகால விரோதப் போக்கைக் கருத்தில் கொண்டு, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கை எடுப்பது எதிர்பாராத ஒன்று அல்ல, ஆனால் இது செயல்படுத்தப்பட்டால், ஐ.நா. அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கு மிகவும் ஆபத்தாக அமையும்" என்று கூறினார்.

முன்னதாக, மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இரு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேர் கடந்த வாரம் பொது வெளியில் தூக்கிலிடப்பட்டனர். இதுவரை 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x