Last Updated : 27 Dec, 2016 07:08 PM

 

Published : 27 Dec 2016 07:08 PM
Last Updated : 27 Dec 2016 07:08 PM

கருங்கடலில் விழுந்த ரஷ்ய ராணுவ விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு கருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய ராணுவ விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் டியு-154 ராணுவ விமானம், கடந்த 25-ம் தேதி மாஸ்கோ நகருக்கு அருகே உள்ள கலோவ்ஸ்கி ராணுவ தளத்திலிருந்து சிரியாவுக்கு புறப்பட்டது. இதனிடையே, எரிபொருள் நிரப்புவதற்காக சோச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த விமானம், அடுத்த சில நிமிடங்களில் கருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 64 இசைக்கலைஞர்கள், ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 92 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவைச் சேர்ந்த 3,500 பேர், 45 கப்பல்கள், 12 விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் 192 நீச்சல் வீரர்கள் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 12 சடலங்களும் 156 உடல் பாகங்களும் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேடுதல் வேட்டையின்போது அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “விபத்துக்குள்ளான விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி, கடற்கரையிலிருந்து 1,600 மீட்டர் தொலைவில் 17 மீட்டர் ஆழத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆய்வுக்காக மாஸ்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தின் 5 பாகங்கள் கடற்கரையிலிருந்து 1,700 மீட்டர் தொலைவில் 30 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டன” என கூறப்பட்டுள்ளது.

இந்த கருப்புப் பெட்டியை ஆய்வு செய்தால் விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இதில் தீவிரவாத சதி எதுவும் இல்லை என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில், அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் போரிட்டு வருகிறது. இதற்காக அங்கு முகாமிட்டுள்ள வீரர்களை, வரும் புத்தாண்டு அன்று மகிழ்விப்பதற்காக இசைக்கலைஞர்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போதுதான் இந்த விபத்து நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x