Published : 17 Oct 2022 04:50 AM
Last Updated : 17 Oct 2022 04:50 AM

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தொடக்கம்: மீண்டும் அதிபராகிறார் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்.

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வதுதேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் (69), 3-வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில்,கட்சியின் பொதுச் செயலர் தேர்வுசெய்யப்படுகிறார். அவரே நாட்டின் அதிபராகவும் பதவியேற்கிறார்.

இந்த நடைமுறைப்படி 2013 மார்ச் 14-ம் தேதி சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்றார். 2017-ல்2-வது முறையாக அவர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் கட்சி நிர்வாகிகள் 2,296 பேர் பங்கேற்றுள்ளனர். வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவுக்கு 200 உறுப்பினர்களும், ஆட்சிமன்றக் குழுவுக்கு 25 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இறுதியாக கட்சியின் பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

சீன அரசமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் 10 ஆண்டுகள் மட்டுமே அதிபராக நீடிக்க முடியும் என்ற வரம்பு இருந்தது. 2018 மார்ச் மாதம் நடைபெற்ற சீன நாடாளுமன்றக் கூட்டத்தில், அதிபர் பதவிக்கான 10 ஆண்டுகள் வரம்பு சட்டப்பூர்வமாக நீக்கப்பட்டது.

இதன்படி, தற்போது நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக கட்சியின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டு, அதிபராகப் பதவியேற்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

சீனா, தைவான் மோதல்

முதல்நாள் மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் பேசும்போது, “ஹாங்காங் முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அடுத்தகட்டமாக, அமைதியான முறையில் சீனாவுடன் தைவானைஇணைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். தேவைப்பட்டால் ராணுவத்தையும் பயன்படுத்துவோம். எந்த வகையிலாவது சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து தைவான் அதிபர் சாய் இங் வென் சார்பில் அவரது செய்தித் தொடர்பாளர் சாங் டன்-ஹன், தைபே நகரில் நேற்று கூறும்போது, “தைவான் ஜனநாயக நாடு. எங்களது சுதந்திரம், இறையாண்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒரு நாடு, இரு நிர்வாகம் என்றசீனாவின் நடைமுறையை தைவான்மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஓர் அங்குலநிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். இருதரப்பும் ஏற்கும் உடன்பாட்டை எட்ட சீனாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால், அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம். சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் நடவடிக்கைகளை, தைவான் பாதுகாப்புத் துறை கண்காணித்து வருகிறது” என்றார்.

இந்நிலையில், தைவானின் பாதுகாப்புக்காக அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் 7-வது படைத் தொகுதி கமாண்டர் கார்ல் தாமஸ் நேற்றுகூறும்போது, “ராணுவ பலத்தின் மூலம் தனது எல்லையை விரிவுபடுத்த சீனா முயற்சிக்கிறது. இதை சர்வதேச சமூகம் அனுமதிக்காது” என்றார்.

உக்ரைன் விவகாரத்தால் அமெரிக்கா, ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக பதவியேற்பதால், தைவான் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இடையிலான பனிப்போர் உச்சத்தை தொடும் என்று அஞ்சப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x