Published : 09 Nov 2016 06:01 PM
Last Updated : 09 Nov 2016 06:01 PM

இவர்தான் டொனால்டு ட்ரம்ப்: அறிந்திட 15 தகவல்கள்

அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி ஏற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப் கடந்து வந்த பாதை பற்றிய 15 முக்கிய தகவல்கள்:

* குடியரசுக் கட்சியின் சமீபத்திய அடையாளமாக உருவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப்படுபவர்.

* நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பெரும் பணக்காரர் ஆனவர் ட்ரம்பின் தந்தை. ட்ரம்ப் அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் பயின்றவர். குடும்பத் தொழிலையே டிரம்ப்பும் செய்தார். எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உட்படப் பல நியூயார்க் கட்டிடங்களையும் உணவகங்களையும் சில ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கியவர்.

* அமெரிக்காவின் பெரும் புள்ளியான ட்ரம்ப், கடன் பெருகி எல்லாவற்றையும் இழக்கும் நிலைமையும் அவருக்கு நேர்ந்தது. எனினும் தனது தொழில் திறமையால் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப்பட்டார்.

* இசை, பொழுதுபோக்கு, விளையாட்டு என பல துறைகளில் ஆர்வம் மிக்கவர் டொனால்டு ட்ரம்ப். அதிபர் பதவிக்கு இதுவரை போட்டியிட்ட எல்லோரையும்விடப் பெரும் பணக்காரும் ட்ரம்ப்தான்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டது எப்படி?

* பல ஆண்டுகளாகவே அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் ட்ரம்ப். ராஸ் பெரோ என்பவர் தொடங்கிய ‘சீர்திருத்தக் கட்சி’ என்னும் அனாமதேயக் கட்சியில் 1999-ல் சேர்ந்து போட்டியில் குதிக்கலாமா என்றுகூட நினைத்தார்.

* 2000-ல் திரும்பக் குடியரசுக் கட்சிக்கு வந்தார். 2012-ல் ஒபாமா அமெரிக்கக் குடிமகனே இல்லை என்று ஒரு பிரச்சினையைக் கிளப்பிக் கவனத்தைத் தன் மீது திருப்ப முயற்சி செய்தார். இதன் மூலம் அமெரிக்க மக்களின் கவனத்தை தன் மீது விழச் செய்தார்.

* அவர் குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், அவர் அமெரிக்காவின் கவனத்தை அமெரிக்கா மீது திருப்பியதால் என்று சொல்லலாம் குறிப்பாக, வெள்ளை அமெரிக்காவின் கவனத்தை. வெள்ளை இனப் பணக்காரர்களும் பணக்காரர்களாக ஆவோம் என்று கனவு காண்பவர்களும் சொல்ல விரும்பியதை, ஆனால் சொல்லத் தயங்கியதை அவர் மிகத் தெளிவாக, உரத்த குரலில் சொன்னார். இதுவே டொனல்டு ட்ரம்பின் வெற்றிக்கு வழி வகுந்துள்ளது.

தேர்தலில் டிரம்ப் கையாண்ட உத்தி

* ட்ரம்பின் தேர்தல் பயணங்கள் முழுவதிலும் அமெரிக்காவில் அமெரிக்கர்கள் தங்களது உரிமையைப் பெற வேண்டும் என்பதையே தொடர்ந்து தனது வாக்காளர்களிடம் வலியுறுத்தி வந்தார்.

* சட்டங்களின் ஓட்டைகளை அடைத்து, வரிகளைக் குறைக்க வேண்டும் என்றார். இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் அமெரிக்கர்களிடம் நம்பிக்கை அளித்தார்.

* இரண்டாவதாக அமெரிக்காவுக்கு மக்கள் குடியேறுவதைத் தடுக்க வேண்டும்; குறிப்பாக இஸ்லாமியரையும் ஹிஸ்பானிக்குகளையும் வரவிடக் கூடாது. மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஆட்கள் நுழைவதைத் தடுக்கச் சுவர் எழுப்ப வேண்டும். மூன்றாவதாக, இஸ்லாமியப் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சர்ச்சை மிக்க கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

* இரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும்; ரஷ்யாவுடன் நட்புகொள்ள வேண்டும் என யாரும் எதிர்பார்க்காத கருத்துகளை தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரங்களில் ட்ரம்ப் கூறி வந்தார்.

* ஊழல் விவகாரம் தொடர்பாக ஹிலாரியின் நீக்கப்பட்ட இ-மெயில் குறித்து தொடர்ந்து தனது தேர்தல் களங்களில் குரல் எழுப்பி வந்தார்.

சர்ச்சை நாயகன் ட்ரம்ப்

* டொனால்டு ட்ரம்ப் வருமான வரி கணக்குகளை வெளியிடாமல் தொடர்ந்து மறைத்து வருவதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி தேர்தல் பிரச்சார மேடைகளில் கேள்வி எழுப்பி வந்தார்.

* அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நாட்களில் ட்ரம்ப்பின் மீது வரிசையாக தொடர்ந்து பெண்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடுத்தனர். இந்தக் குற்றச்சாட்டையே ஜனநாயகக் கட்சி தங்களுக்குக் கிடைத்த பெரும் ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து பிரச்சரம் செய்து வந்தது. இதுவே ட்ரம்ப் - ஹிலாரி பங்கேற்ற விவாதங்களிலும் எதிரொளித்தது.

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி

* பெரும்பாலான அனைத்து கருத்துக் கணிப்புகளும் ட்ரம்ப் வெற்றி பெறுவது கடினம் என்று கூறிய நிலையில் அனைத்து கருத்துக் கணிப்பையும் பொய்யாகி அமெரிக்காவின் 45வது அதிபராக ஜனவரியில் பதவி ஏற்க இருக்கிறார் டொனால்டு ட்ரம்ப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x