Last Updated : 09 Sep, 2022 05:34 PM

1  

Published : 09 Sep 2022 05:34 PM
Last Updated : 09 Sep 2022 05:34 PM

எலிசபெத் II - விமர்சனங்களைக் கடந்து கம்பீர ராணியாக வலம் வந்த கதை!

ராணி எலிசபெத் | கோப்புப் படம்

”நாம் மீண்டும் சந்திப்போம்”- இவை பிரிட்டன் மக்களின் மறக்க முடியாத வார்த்தைகளாகியுள்ளன. மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது ஒவ்வொரு பொது பேச்சுரையின்போதும் இந்த வார்தைகளை தவறாமல் குறிப்பிட்டு வந்திருந்தார்.

”ராணி பால்மோரலில் அமைதியாக இறந்தார். ராஜாவும் (சார்லஸ்) அவரது மனைவி (கமிலா) லண்டன் திரும்புவார்கள்” என்று பிரிட்டன் அரசக் குடும்பம் நேற்று பொதுமக்களிடம் அறிவித்தது. பிரிட்டனின் அரச பதவியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக அலங்கரித்த ராணி எலிசபெத் தனது 96-வது வயதில் மரணமடைந்திருக்கிறார். ராணியின் மறைவை தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ராணிக்கு தங்களது இரங்கலை தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பக்கிங்காம் அரண்மனையை மலர்களால் நிரப்பி வருகின்றனர்.

நீண்ட கால ராணி: உலகின் அரசக் குடும்பங்களின் வரலாறு பலவும், ராஜாக்களின் அரியணையால் எழுதப்பட்டிருக்கிறது, இவ்வாறான நிலையில் பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத் வரலாற்றில் முக்கியமானவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். அவரது இருப்பும் நமக்கு அதனைத்தான் உணர்த்தி இருக்கின்றது. வரலாற்றில் இதுவரை இரண்டு மன்னர்கள் மட்டுமே நீண்ட காலம் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பிரான்சின் லூயிஸ், இவர் சுமார் 72 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். இவரை அடுத்து தாய்லாந்தின் பூமிபோல் அதுல்யதேஜ் 70 ஆண்டுகள்வரை மன்னராக இருந்தார். இந்த இருவருக்கு அடுத்து, நீண்டக் காலம் அரசப் பொறுப்பில் இருந்த ’ராணி’ என்ற பெருமையை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றிருக்கிறார்.

தேடி வந்த மகுடம்: அலெக்ஸ்சாண்ட்ரா எலிசபெத் மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி எலிசபெத், 1926 ஆம் ஆண்டு,ஏப்ரல் 21-ம் தேதி லண்டனில் பிறந்தார். எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் VI, 1936-ம் ஆண்டு மன்னராக அறிவிக்கப்பட்ட முதலே அரசக் குடும்பத்தில் அடுத்த நேரடி வாரிசாக எலிசபெத் முன்னிறுத்தப்பட்டார். இந்த நிலையில் 1952-ம் ஆண்டு மன்னர் ஜார்ஜின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து கென்ய சுற்றுப்பயணத்திலிருந்து உடனடியாக திரும்பிய இளவரசி எலிசபெத், ராணி எலிசபெத்தாக முடிசூட்டப்பட்டார்.

பிலிப்பும் - எலிசபெத்தும்: முன்னாள் கப்பற்படை வீரரான பிலிப்பை, எலிசபெத் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு இளவரசர் சார்லஸ் உட்பட நான்கு பிள்ளைகள் உள்ளனர். பிரிட்டன் அரசக் குடும்பத்தில் நீண்ட நாட்கள் இணைந்து பயணித்த இணையாக இருவரும் அறியப்படுகின்றனர். இளவரசர் பிலிப் பெரும்பாலும் மக்கள் நலப் பணிகளிலும், தொண்டுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ராணி எலிசபெத்துக்கு உற்ற துணையாக இருந்து வந்த பிலிப் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார்.

இரண்டாம் உலகப் போர்: 1939-ம் ஆண்டு பிரிட்டன் இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது. இளவரசி எலிசபெத்தின் தாயார் நாட்டைவிட்டு வெளியேற மறுத்து போர் முடியும் வரை மன்னர் ஜார்ஜ்க்கு ஆதரவாக இருக்க முடிவு செய்தார். அப்போது 14 வயதாக இருந்த எலிசபெத் வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நாங்கள் மக்களுக்கு துணையாக இருப்போம் என்று ஊக்கப்படுத்தினார். அவர் கூறியபடி இரண்டாம் உலகப் போரின் முடிவு பிரிட்டனுக்கு சாதகமாகவே அமைந்தது. மேலும், இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து பெண்கள் ராணுவப் பிரிவில் எலிசபெத் பணியாற்றினார். இதன் மூலம் பிரிட்டன் ராணுவத்தில் இணைந்த முதல் அரச குடும்ப பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

சுற்றுப்பயணம்: 1953-ம் ஆண்டிலிருந்து ராணி எலிசபெத் இதுவரை 100 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் செல்வாக்கு சற்று சரிந்தது. இதனை சரிசெய்ய தீவிர முயற்சி மேற்கொண்டார். மேலும் தனது தலைமையில் காமன்வெல்த் நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ராணி எலிசபெத் சிறப்பாக செயல்பட்டார். தொடர்ந்து ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ராணி எலிசபெத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது முதல் காமன்வெல்த் நாடுகள் பயணத்தில் சுமார் 43,618 மைல்களை இலக்காக கொண்டிருந்தார் எலிசபெத்.

சார்லஸ் - எலிசபெத் - டயனா: ராணி எலிசபெத்தின் மூத்த மகனான சார்லஸின் திருமண வாழ்க்கை அரசக் குடும்பம் நினைத்ததுபோல் இனிமையாக அமையவில்லை. அரசக் குடும்ப விதிகளுக்கு அஞ்சி சார்லஸ் தனது காதலி கமிலாவை மணக்காமல், டயானாவை மணந்தார். திருமணத்துக்குப் பிறகு சார்லஸ் - டயானா இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து அதிகரித்தது. இவ்விவகாரம் அரசக் குடும்பத்தில் பூதாகரமாக வெடித்தது. ஊடகங்களில் பேசு பொருளானது.

இந்தச் சூழலில் 1996-ம் ஆண்டு சார்லஸ் - டயானா இணை விவாகரத்து பெற்றது. இந்த நிலையில் டயானா, தனது காதலருடன் கார் விபத்தில் பலியானார். டயானாவின் மரணத்துக்கு ராணி எலிசபெத்தும், சார்லஸும்தான் திட்டமிட்டனர் என்றும் எலிசபெத் கொடுமைக்காரராக டயானாவிடம் நடந்து கொண்டார் என்று இன்றளவும் புனை கதைகள் பிரிட்டனில் உலாவி வருகின்றன.

ஹாரி - மெக்கன் வெளியேற்றம்: சார்லஸ் - டயானா தம்பதியின் இரண்டாவது மகனான ஹாரியும் அவரது மனைவி மெக்கனும் அரசக் குடும்ப பொறுப்புகளிலிருந்து 2020-ம் ஆண்டு விலகினர். இதனைத் தொடர்ந்து அரசக் குடுப்மத்தில் இனவாதம் நிலவுகிறது. ஹாரியின் மனைவி மெக்கன் ஒதுக்கப்பட்டார் என்ற செய்திகள் வெளியாகி ராணி எலிசபெத்துக்கு நெருடலை அளித்தன.

விதியை மீறாத ராணி: 70 ஆண்டுகால ஆட்சியில் எலிசபெத் அரசக் குடும்பத்தின் விதிகளை மீறாது கடைசிவரை பின்பற்றினார். தான் அணியும் உடை, நகை, கடிகாரம் என அவருடைய பிம்பம் பிரிட்டன் அரசக் குடும்பத்தின் பண்பை எப்போதும் வெளிப்படுத்தின. ராணியாக பிரிட்டனை நவநாகரீக வளர்ச்சி நோக்கி இறுதிவரை எலிசபெத் தள்ளினார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு தனது இந்திய சுற்றுப் பயணத்தின்போது ராணி எலிசபெத் ‘துன்பியல் சம்பவம்’ என்று வருந்தினார். பிரிட்டன் தலைமையின் கீழ் அதன் காலனி ஆதிக்கத்திலிருந்த நாடுகள் அடைந்த துயரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை. அந்தப் பட்டியல் பெரிது. பிரிட்டனின் ஆதிக்க செயல்களுக்காக ராணி எலிசபெத் வாழ்நாள் முழுவதும் விமர்சிக்கப்பட்டு வந்தார்.

கணவர் பிலிப்பின் மரணத்துக்குப் பிறகு ராணி எலிசபெத், பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை குறைத்து கொண்டு ஓய்வுக்கு முக்கியத்துவம் அளித்தார். இந்த நிலையில் பிலிப் மரணமடைந்து ஒருவருடத்துக்குப் பிறகு ராணி எலிசபெத்தும் மறைந்திருக்கிறார்.

விமர்சனங்களை கடந்து, பிரிட்டனின் ராணியாக தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றி கம்பீரமான ராணியாக எலிசபெத் விடைபெற்று இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x