Last Updated : 08 Oct, 2016 05:33 PM

 

Published : 08 Oct 2016 05:33 PM
Last Updated : 08 Oct 2016 05:33 PM

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு: மன்னிப்பு கேட்டார் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ட்ரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டில் பெண்கள் குறித்து ட்ரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோவை ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் இப்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அழகான பெண்களிடம் நான் அத்துமீறி நடந்து கொள்வேன். பிரபல தொழிலதிபராக இருப்பதால் எனது அத்துமீறலை பெண்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவரது பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் தலைவர்கள்கூட ட்ரம்ப் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து ட்ரம்ப் கூறியதாவது: நான் முட்டாள்தனமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த வார்த்தைகளை அடிப்படையாக வைத்து என்னை மதிப்பிட வேண்டாம். நான் 100 சதவீதம் பரிசுத்தமான நபர் என்று கூறவில்லை. ஆனால் சிறந்த அதிபராக, குடிமகனாக இருப்பேன்.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டபோது ஹிலாரியை கொடுமைப்படுத்தியுள்ளார். அடுத்த நேரடி விவாதத்தின்போது முழு விவரங்களையும் வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஹிலாரி கிளிண்டன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''இதுபோன்ற நபர் அமெரிக்காவின் அதிபராக மக்கள் அனுமதிக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் பிரதிநிதிகள் சபையின் தலைவருமான பால் ரயான் கூறியபோது, ''ட்ரம்பின் பேச்சால் மனவேதனை அடைந்துள்ளேன். அவர் பங்கேற்கும் வின்ஸ்கான் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள மாட்டேன்'' என்று அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே சில பெண்களை பன்றி, வேலைக்காரி என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அப்போதெல்லாம் தனது பேச்சுக்கு நியாயம் கற்பித்த அவர் தற்போது முதல்முறையாக மன்னிப்பு கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x