Last Updated : 24 May, 2016 08:27 PM

 

Published : 24 May 2016 08:27 PM
Last Updated : 24 May 2016 08:27 PM

400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா

புவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான மூலக்கூறுகள் உருவானதற்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனுக்குள் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பே காரணம் என நாசாவின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நமது கிரகத்தின் பூர்வீகம் என்ன? உயிர்கள் வாழ்வதற்கு என்ன சூழல் தேவை? பிற கிரகங்களில் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளனவா என்ற தேடலில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் இளம் சூரியனிடம் இருந்து வெளிப்பட்ட வெப்பம் குளிராக இருந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு போதுமானதாக இல்லை என்ற கருத்து இதுவரை நிலவி வருகிறது.

இந்நிலையில் சூரியனின் வெப்ப ஆற்றல் காரணமாகவே குளிர் பந்தாக இருந்த பூமி உயிர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகமாக மாறியதாக நாசாவின் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன், சூரியன் தோன்றியபோது தற்போது நாம் காணும் பிரகாசத்தை விட மூன்றில் ஒரு பங்கு பிரகாசத்துடன் தான் இருந்தது. ஆனால் அதன் வெளிப்புறம் எரிமலை போல் எப்போதும் வெடித்துக் கொண்டிருந்தது. அதில் இருந்து வெளிப்பட்ட எண்ணற்ற மூலக்கூறுகளும், கதிர்வீச்சுகளும் விண்ணில் சிதறியபடி இருந்தன. அப்போது பீறிட்ட வெப்பம் தான் பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான ஆற்றலையும், சூழலையும் உருவாக்கி உள்ளது. சூரியனில் இருந்து வெளிப்பட்ட இந்த ஆற்றல்கள் தான் வாழ்க்கைக்கு தேவையான டிஎன்ஏ, ஆர்என்ஏ போன்ற மூலக்கூறுகளை உருவாக்கியது.

400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சூரியன் ஆற்றலை இழந்தபோது, இளம் நட்சத்திரம் சூரியனாக உருவெடுத்தது. அதில் இருந்து வெளியான வெடிப்புகள், கதிர்வீச்சுகள் தான் பூமிக்கு தேவையான சக்தியை வழங்கி வருகின்றன. அந்த நட்சத்திரம் தான் தற்போது நாம் காணும் சூரியன்.

இவ்வாறு நாசாவின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x