Published : 06 Jun 2022 06:15 AM
Last Updated : 06 Jun 2022 06:15 AM

வங்கதேசம் | கன்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

டாகா: வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் சிட்டகாங் நகருக்கு அருகே உள்ள பிஎம் ரசாயன கன்டெய்னர் கிடங்கில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தீப்பற்றியது. பின்னர் கன்டெய்னர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தீ மளமளவென பரவி உள்ளது.

இதுகுறித்து சட்டகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (சிஎம்சிஎச்) புறக்காவல் நிலைய துணை ஆய்வாளர் நூருல் ஆலம் கூறும்போது, “பிஎம் கன்டெய்னர் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் 19 வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ஒரு கன்டெய்னரிலிருந்து மற்றொரு கன்டெய்னருக்கு தீ மளமளவென பரவி உள்ளது. போலீஸார் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் இதுவரை தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உட்பட 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் உட்பட 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 350 பேர் சிஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ராணுவ மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்றார்.

இதுகுறித்து சட்டகிராம் மண்டலஆணையர் அஷ்ரப் உதின் கூறும்போது, “தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 560 டாலர்(50 ஆயிரம் டாகா), காயமடைந் தவர்களுக்கு தலா 224 டாலர் (20 ஆயிரம் டாகா) வழங்கப்படும்” என்றார்.

பிரதமர் ஹசீனா இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கன்டெய்னர் ஆலையில் ஏற்பட்ட வெடி சத்தம் சுமார் 4 கி.மீ. சுற்றளவில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தீயணைப்புத் துறை தலைவர் பிரிகேடியர் ஜெனரல் முகமது மைனுதீன் கூறும்போது, “ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட பல்வேறு வகையான ரசாயனங்கள் கன்டெய்னர்களில் சேமித்து வைக்கப்பட்டிருந் ததாகவும், இதுவே தீ மளமளவென பரவ முக்கிய காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்றார்.

பிஎம் கன்டெய்னர் கிடங்கு இயக்குநர் முஜிபுர் ரஹ்மான் கூறும் போது, “தீ விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. கன்டெய்னரிலிருந்து தீ விபத்து தொடங்கி இருக்கலாம் என கருதுகிறோம். காயமடைந்தவர் களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை எங்கள் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். அத்துடன் காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x