Last Updated : 10 May, 2016 10:07 AM

 

Published : 10 May 2016 10:07 AM
Last Updated : 10 May 2016 10:07 AM

அணு ஆயுதங்கள் அதிகரிக்கப்படும்: வடகொரிய அதிபர் அறிவிப்பு

அணு ஆயுதங்களை அதிகரிக்க வடகொரியா முடிவெடுத்துள்ளது. அதே சமயம் சமரச பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென்கொரியாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

வடகொரியாவில் ஆளும் கட்சியின் மாநாடு 40 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முக்கிய நடவடிக்கையை எடுத்தார். அத்துடன் இரட்டை பொருளாதாரம் மற்றும் அணு ஆயுத அதிகரிப்பு குறித்தும் முக்கிய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். எனினும் உள்நாட்டு இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வரை அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கொரிய தீபகற்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான பணிகளை தொடர்வது என்றும் புதிய கொள்கை வகுக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக் கானோர் முன்னிலையில் உரையாற்றிய அதிபர் கிம், ‘‘அண்டை நாடுகளுடன் வடகொரியா நட்புறவை தான் நாடுகிறது. தென்கொரியாவுடன் ராணுவ பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் குறையும்’’ என்றார்.

இந்நிலையில் வடகொரியாவின் இந்த அழைப்பை, தென் கொரியா நேற்று நிராகரித்தது. இது குறித்து அந்நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் மூன் சங் யன் கூறும் போது, ‘‘முழு அக்கறையுடன் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த் தைக்கு வடகொரியா அழைப்பு விடுக்கவில்லை. ஒருபுறம் அணு ஆயுதங்களை விரிவாக்கம் செய் வதற்கு முடிவெடுத்து, மறுபுறம் நட்புக்கரம் நீட்டுவது ஏற்புடையதாக படவில்லை. அணு ஆயுத வளர்ச்சி தொடர்பாக வடகொரியா அதிபர் கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றும் விதமாகவே அந்த மாநாடு நடந்து முடிந்துள்ளது. இதற்கு தென்கொரியா ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. தொடர்ந்து அந்நாட்டின் மீது தடை விதிக்க சர்வதேச நாடுகளுக்கு நெருக்கடி கொடுப்போம்’’ என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x