Published : 04 Apr 2022 07:14 AM
Last Updated : 04 Apr 2022 07:14 AM
கொழும்பு: இலங்கையில் அவசரநிலை மற்றும் ஊரடங்கு உத்தரவைக் கண்டித்து கொழும்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
இலங்கை அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. உணவு, எரிபொருளுக்கு மக்கள் திண்டாடுகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 5 போலீஸார் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று இரவு முதல் நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அவசரநிலை பிரகடனத்தைக் கண்டித்தும் ஊரடங்கு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரரிவித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று கொழும்பில் உள்ளமெயின் ஸ்கொயர் பகுதிக்கு ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை ராணுவத்தினரும் போலீஸாரும் தடுத்து நிறுத்தினர். இதுஅரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று எதிர்க் கட்சித் தலைவர்சஜித் பிரேமதாசா கூறினார். அதிபர்கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கையில் பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, போராட்டம் பரவுவதைத் தடுக்க, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட் டுள்ளன.
இதுகுறித்து அமைச்சரும் பிரதமரின் மகனுமான நமல் ராஜபக்ச கூறும்போது, ‘‘விபிஎன் நெட்வொர்க் கிடைக்கும்போது சமூக ஊடகங்களை முடக்குவது பயனற்ற செயல். எனவே, இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT