Published : 09 Mar 2022 09:57 AM
Last Updated : 09 Mar 2022 09:57 AM

புதின் தேர்வு செய்துள்ள கொலைகார பாதை உக்ரைனை வென்று தராது: அமெரிக்க அதிபர் பைடன்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து குழந்தையுடன் வெளியேறும் மனைவியையும், குழந்தையையும் பிரியக் காத்திருக்கும் வீரர்.

வாஷிங்டன்: உக்ரைன் படையெடுப்பு ரஷ்ய அதிபர் புதினுக்கு வெற்றியை தரப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அறிவித்துள்ளன. அந்த வரிசையில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி இறக்குமதியை நிறுத்திக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்ய அதிபர் புதினுக்கு வெற்றி கிட்டாது. இந்த உலகமே உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை கண்டுகொண்டிருக்கிறது. ரஷ்யா தனது தாக்குதலைத் தொடரலாம் ஆனால் அதற்கு இன்னொரு புறம் மோசமான விலையைக் கொடுக்கும். புதினால் ஏதேனும் ஒரு நகரை வேண்டுமானால் கைப்பற்ற முடியுமே தவிர ஒரு நாட்டைக் கைப்பற்ற முடியாது" என்றார்.

மனிதாபிமான வழித்தடமும்; உக்ரைன் விமர்சனமும்: மேற்கத்திய நாடுகள் எத்தனை எத்தனை தடைகளை விதித்தாலும் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனில் முன்னேறி வருகிறது. நேற்று உக்ரைனின் கார்கிவ், செர்னிஹிவ், சுமி, மரியுபோல் ஆகிய நான்கு நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடம் ஏற்படுத்தும் வகையில் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால் இந்த போர் நிறுத்த அறிவிப்பையும், மனிதாபிமான வழித்தடத்தையும் உக்ரைன் கடுமையாக விமர்சித்துள்ளது. போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு ரஷ்யா அத்துமீறிக் கொண்டுதான் இருக்கிறது. மேலும், ரஷ்யா அறிவித்துள்ள மனிதாபிமான வழித்தடங்கள் உக்ரைன் மக்களை ரஷ்யாவுக்குள்ளும், பெலாரஸ் நாட்டுக்குள்ளும் தஞ்சம் புகும் வகையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொலைகார பாதை: உக்ரைனில் நாளுக்கு நாள் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 20 லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த சுமையும் ஐரோப்பிய நாடுகள் மீது விழாத வகையில் அமெரிக்க அகதிகள் மேலாண்மையில் தேவையான உதவிகளை செய்யும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. "புதினின் போர் தேவையற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்களைப் பறிக்கிறது. புதின் இரக்கமின்றி அப்பாவி மக்களை, பள்ளிக்கூடங்களை, மருத்துவமனைகள், குடியிருப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார். புதின் கொலைகார பாதையை தேர்வு செய்து பயணிக்கிறார்" என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா நீண்ட போரை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் "போர் விமானங்களை வழங்கப்போவதில்லை, ராணுவ வீரர்களை அனுப்பப்போவதில்லை. ஆனால் உக்ரைன் மக்களின் துணிச்சலுக்கு தலைவணங்கி அவர்கள் ரஷ்ய தாக்குதலை, அடக்குமுறையை, வன்முறையை எதிர்கொள்ள உதவுவோம் என்று" ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x