Last Updated : 21 Apr, 2016 09:40 AM

 

Published : 21 Apr 2016 09:40 AM
Last Updated : 21 Apr 2016 09:40 AM

எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா - சீனா பேச்சுவார்த்தை

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவும் சீனாவும் 19-வது சுற்று பேச்சுவார்த்தையில் நேற்று ஈடுபட்டன. தீவிரவாதி மவுலானா மசூத் அசார் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியசியுடன் வருடாந்திர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

சுமார் 3,488 கி.மீ. நீளமுள்ள எல்லைக் கோட்டு (எல்ஏசி) பகுதியில் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க இருதரப்பும் முயற்சி செய்து வருகின்றன. அருணாசலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை திபெத்துக்கு உட்பட்டதாக சீனா உரிமை கோரி வருகிறது. 1962-ம் ஆண்டு போரில் சீனா கைப்பற்றிய அச்சாய் சின் உள்ளிட்ட பகுதிகளையும் சேர்த்து இந்தியா உரிமை கோரி வருகிறது.

எல்லைப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காகவே இருதரப்பிலும் 2003-ம் ஆண்டு முதல், சிறப்புப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 2005-ம் ஆண்டு முதல்கட்ட உடன்படிக்கை எட்டப்பட்டது.

எல்லை விவகாரம் தவிர, இரு தரப்புக்கு இடையிலான பல்வேறு பிரச்சினைகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து தோவல், யாங் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் விவாதிக்க உள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் உள்ளிட்ட தீவிரவாதிகளை ஐ.நா. மூலம் தடை செய்யக் கோரும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இவ்விவகாரமும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறுகிறது.

முன்னதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சயீத் அக்பருதீன் மறைமுக வீட்டோ அதிகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

சீன பிரதமர் லீ கெகியாங்கை அஜித் தோவல் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், சீன பிரதமரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x