Published : 24 Feb 2022 11:48 AM
Last Updated : 24 Feb 2022 11:48 AM

கிழக்கு உக்ரைனில் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா: பிரத்யேக ஆயுதங்கள் மூலம் ராணுவ கட்டமைப்புகளைக் குறிவைத்து குண்டு மழை 

மாஸ்கோ: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அங்கு தலைநகர் கீவின் முதன்மை விமான நிலையம் அருகே குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

வரலாறு காணாத விளைவு ஏற்படும்: முன்னதாக உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்துப் பேசிய ரஷ்ய அதிபர் புதின், "உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுகிறேன். இதன் நோக்கம், கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைன் ஆட்சியாளர்களால் சில மக்கள் இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் துயரத்துக்கு முடிவு காண தாக்குதலுக்கு உத்தரவிடுகிறேன்.

உக்ரைனில் இருந்து நேட்டோ ஆதாரவுப் படைகள் பின்வாங்க வேண்டும். உக்ரைன் நாசிகளின் கூடாரமாகியுள்ளது. உக்ரைன் வீரர்களே உங்களின் ஆயுதங்களை கீழே போடுங்கள்.

ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் யாராவது தலையிட நினைத்தாலோ, எங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறினாலோ நாங்கள் உடனடியாக தகுந்த பதிலடி கொடுப்போம். அதன் விளைவுகள் வரலாறு இதுவரை சந்தித்திராததாக இருக்கும்.

உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் உக்ரைனை ஆக்கிரமிக்க மாட்டோம். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம்" என்று கூறினார்.

தலைநகரில் தாக்குதல்.. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் குண்டு மழை பொழிகிறது. உக்ரைன் விமான நிலையம், துறைமுகம் ஆகியனவற்றை முதலில் கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் ஆகையால் பொதுமக்களை குறிவைத்து அல்லாமல் ராணுவத்தை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுகிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கான துல்லியமான தாக்குதலை நடத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதை உறுதிப்படுத்துவது போல், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், ரஷ்யா நமது ராணுவ கட்டமைப்பைக் குறிவைத்தே தாக்குதல் நடத்துகிறது என்று பேஸ்புக்கில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வுக்கான உக்ரைன் தூதர்

இதற்கிடையில் ஐ.நா.வுக்கான் உக்ரைன் தூதர் செர்கிய் கிஸ்லிட்ஸியா, உக்ரைன் மீதான தாக்குதலைத் தடுக்க வேண்டியது ஐ.நா.வின் கடமை, அத்தனை உறுப்பு நாடுகளும் இணைந்து இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

அந்த இரண்டு மாகாணங்கள்.. உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இதனால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனில் 24 மாகாணங்கள் உள்ளன. இதில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் டான்ஸ்க், லாஹன்ஸ்க் பகுதிகளின் தலைவர்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இரு பகுதிகளையும் தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. உலக நாடுகளும் இதை அங்கீகரிக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவித்தார்.

இந்த இரண்டு மாகாணங்களில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். இவர்களை சுட்டிக்காட்டியே, கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைன் ஆட்சியாளர்களால் சில மக்கள் இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் துயரத்துக்கு முடிவு காண தாக்குதலுக்கு உத்தரவிடுகிறேன் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x