Last Updated : 20 Apr, 2016 07:10 PM

 

Published : 20 Apr 2016 07:10 PM
Last Updated : 20 Apr 2016 07:10 PM

காயமடைந்த தீவிரவாதிகளைக் கொன்று உடல் உறுப்புகளை விற்கும் ஐ.எஸ்.- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

பணபலம் குறைந்து வரும் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு காயமடைந்த தனது வீரர்களைக் கொன்று அவர்களது உடல் உறுப்புகளை அயல்நாட்டு கள்ளச் சந்தையில் விற்கிறது என்று ஊடக அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

இராக்கின் மொசூல் நகரின் பெயர் கூற விரும்பாத ஆதாரத்தைச் சுட்டிக் காட்டி அரபு மொழிப் பத்திரிக்கையான அல்-சாபா தனது அறிக்கை ஒன்றில், “காயமடைந்த தனது தீவிரவாதிகளின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுக்குமாறு ஐ.எஸ். மருத்துவர்களை மிரட்டி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

மோசமடைந்த நிதிநிலை:

மொசூல் தெற்குப் பகுதியை சமீபத்தில் இழந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, கடும் நிதிநெருக்கடியில் தத்தளித்து வருகிறது, இதனால் சண்டையில் காயமடைந்த தன் தீவிரவாதிகளையே கொன்று அவர்களது உடல் உறுப்புகளை எடுத்து விற்று வருகிறது. அதாவது இருதயம், கிட்னி உள்ளிட்ட உள்ளுறுப்புகளை எடுத்து கள்ளச் சந்தையில் விற்று வருகிறது என்று இரானிய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இதோடு மட்டுமல்லாமல் ஸ்பானிய தினசரி எல் மோண்டோவை மேற்கோள் காட்டி, சிரியா நாட்டு காயமடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் பிடித்துக் கொண்டு வந்த கைதிகளையும் கொன்று அவர்களது உறுப்புகளையும் கள்ளச் சந்தையில் விற்பதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், மொசூல் சிறைக்கைதிகளிடமிருந்து எவ்வளவு ரத்தத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு ரத்தத்தையும் உறிஞ்சி வருவதாகவும், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் உடலிலிருந்து ரத்தம் எடுப்பதற்காகவே அவர்களது மரண தண்டனையை ஒத்தி வைத்து வருவதாகவும் ஃபார்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டிய இதே பத்திரிகை, மொசூல் மருத்துவமனைகளில் இவ்வாறு உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்ட 183 பிணங்களைக் கண்டதாக தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டு புதிதல்ல...

ஐநா-வுக்கான இராக் தூதர் மொகமது அல் ஹகிம் கடந்த ஆண்டு இதே குற்றச்சாட்டை வெளியிட்ட போது, ஐஎஸ் மனித உடல் உறுப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது என்றும், உடல் உறுப்புகளை எடுக்க மறுக்கும் 12 டாக்டர்களை ஐ.எஸ். கொலை செய்ததாகவும் கூறியிருந்தார். இவர் தனது இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக மொசூல் அருகே மறைவிடத்தில் 12 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை சுட்டிக் காட்டினார்.

ஐ.எஸ். அமைப்பின் நிதி ஆதாரங்கள் கடுமையாக குறைந்து வருவதையடுத்து இத்தகைய கொடூர வழிமுறைகளில் அந்த அமைப்பு இறங்கியுள்ளதாக மீடியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை இழந்து வருவதால் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதன் விளைவாக தண்டல் வசூல் கடுமையாக குறைந்துள்ளது என்று அமெரிக்கத் தகவல் ஒன்று தெரிவித்ததையடுத்து இந்த உடல் உறுப்பு விற்பனை விஷயம் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x