Published : 21 Apr 2016 09:48 AM
Last Updated : 21 Apr 2016 09:48 AM

உலக மசாலா: மனித இதய கேக்!

கேத்ரின் டே கேக் நிபுணர். விதவிதமாக மட்டுமல்ல, பலவகையான உருவங்களிலும் கேக்குகளை செய்து, எல்லோரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிடுவார். கேக் தயாரிப்பது பற்றி பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார். சமீபத்தில் நியூயார்க் நகரில் தன்னுடைய கேக்குகளைக் காட்சிக்கு வைத்திருந்தார் கேத்ரின். புறா, கடல்வாழ் உயிரினங்கள், மனிதத் தலைகள், குழந்தைகள், தேன்கூடு, ரோஸ்ட் செய்யப்பட்ட வான்கோழி, பயமுறுத்தும் லாம்ப்ரே, மனித மூளை, ரத்தம் வடிந்தபடி மனித இதயம் என்று ஏராளமான உருவங்களில் கேக்குகள் அணிவகுத்திருந்தன.

இதில் பெரும்பாலான கேக்குகள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தன. “மனித உறுப்புகள் மீது எனக்கு அளவற்ற ஆர்வம். அதனால்தான் அந்த உறுப்புகளை கேக்குகளில் கொண்டு வந்திருக்கிறேன். என்ன இது என்று முகம் சுளிக்காமல், எப்படி இவ்வளவு பிரமாதமாக உருவாக்க முடிந்தது என்று பாருங்கள். அப்பொழுது ரசிக்க முடியும். இந்த உருவங்களைக் கண்டு பயந்தவர்கள் கூட, வெட்டி துண்டுகளாக்கிக் கொடுத்தபோது ஆர்வத்துடன் சாப்பிட்டனர்”’ என்கிறார் கேத்ரின்.

என்னதான் சொன்னாலும் இதை ரசிக்க முடியலை கேத்ரின்.

துணி துவைப்பதை நேசிக்கும் ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் ‘வாஷிங் மெஷின் கலெக்டர்ஸ் க்ளப்’ என்ற பெயரில் ஓர் அமைப்பையே தொடங்கி நடத்தி வருகிறார்கள். இதில் உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். “நான் எங்காவது பார்ட்டிகளுக்குச் சென்றால் கூட, நண்பர்களிடம் துவைப்பது பற்றிதான் பேசுவேன் துவைப்பதை சலிப்பு தரும் விஷயமாக எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் மிக மகிழ்ச்சியோடு துவைக்கிறோம்.

விதவிதமான டெக்னிக்குகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறோம். எங்கள் அமைப்பு கூடும் நாட்களில் அதிகாலை 4 மணிக்குத் துவைக்க ஆரம்பிப்போம். விதவிதமான வாஷிங் மெஷின்களையும் சேகரித்து வருகிறோம். என்னிடம் 59 வாஷிங் மெஷின்கள் இருக்கின்றன. அனைத்தும் வேலை செய்யும் விதத்தில் நன்றாக இருக்கின்றன” என்கிறார் ஜான் சார்லஸ்.

சிலாகிக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கு?

ஆசியாவின் மிக நீளமான தொங்கு பாலங்களில் ஒன்று சீனாவின் யுன்னான் மாகாணத்தில் லாங்ஜியாங் நதி மீது கட்டப்பட்டிருக்கிறது. 8 ஆயிரம் அடி நீளமும் 920 அடி உயரமும் கொண்ட மிகப் பெரிய தொங்கு பாலம் இது. 5 ஆண்டுகளில் 1,438 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனை ஓட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. மே 1-ம் தேதி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட இருக்கிறது. சுற்றிலும் அழகான மலைகள், கீழே நதி, விவசாய நிலங்கள் என்று பாலத்தில் நடந்து வரும்போது இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இந்தப் பாலம் மூலம் வாகனங்கள் செல்லும் தூரம் கணிசமாகக் குறையும் என்கிறார்கள்.

கண்ணாடிப்பாலம், தொங்குபாலம் என்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்கிறது சீனா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x