Published : 12 Mar 2016 10:46 AM
Last Updated : 12 Mar 2016 10:46 AM

உலக மசாலா: குத்து வாங்கியவர்கள் வீட்டில் குத்து விடாமல் இருந்தால் சரி...

சீனாவின் லாவோஜுன்ஷான் கிராமத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் ஒரு நிகழ்வாக கணவர்கள் தங்கள் மனைவியரை எப்படி அக்கறையோடு நடத்துகிறார்கள் என்பதை அறிவதற்காக ஒரு போட்டி நடத்தப்பட்டது. கணவர்கள் குத்துச் சண்டை பயிற்சி பெறும் ‘பன்ச் பேக்’ உள்ளே நின்று கொண்டார்கள். மனைவியரிடம் “உங்கள் கணவர் மீது கோபம் இருந்தால், கோபம் தீரும் வரை குத்துங்கள்’’ என்று சொல்லிவிட்டார்கள்.

கையுறையுடன் ஏராளமான பெண்கள் வரிசையில் காத்திருந்தார்கள். ஆண்கள் பயத்துடன் தங்கள் மனைவியைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். சில பெண்கள் குத்துவது போல நடித்துவிட்டு, சென்றுவிட்டனர். சிலர் வலிக்காதது போலக் குத்தினர். இந்தக் கணவர்கள் எல்லாம் சந்தோஷமாகத் தங்கள் மனைவியை நன்றியுடன் பார்த்துச் சிரித்தனர். பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கோபத்தைக் காட்டி நிஜமாகவே குத்துவிட்டனர். நிஜக் குத்து வாங்கியவர்கள், தங்களை மாற்றிக்கொண்டு மனைவியிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

குத்து வாங்கியவர்கள் வீட்டில் குத்து விடாமல் இருந்தால் சரி…

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் லாரல் கேன்யன் நிறுவனம் விலங்குகளுக்காகவே பிரத்யேகமாக இசையை உருவாக்கி, வெளியிட்டு வருகிறது. 1999-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. விலங்குகளின் தகவல் பரிமாற்றத்தைக் கண்காணித்து, ஆராய்ச்சி செய்து, அவற்றுக்கு ஏற்றபடி இசையை உருவாக்கி, வெளியிட்டு வருகிறது.

“விலங்குகளை நேசிக்கக்கூடியவர்கள் எல்லாம் இசையை நேசிக்கக்கூடியவர்களாக இருந்தனர். மனிதர்கள், இசை, விலங்குகள் மூன்றையும் இணைத்து, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகிறேன். ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு விதமான இசை. மகிழ்ச்சி, கோபம், விளையாட்டு, தூக்கம் போன்ற சூழலுக்கு ஏற்ற இசையை உருவாக்கியிருக்கிறோம். இந்த இசையைக் கேட்டால் விலங்குகள் தங்கள் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துகின்றன. விலங்குகளுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் போன்றவர்களை உலகம் முழுவதும் இருந்து பயன்படுத்திக்கொள்கிறோம். இசை தயாரானதும் எங்கள் இணையதளத்தில் டிரெய்லர் வெளியிடுவோம். அதைக் கேட்ட பிறகு எங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும்.

நாய், பூனை, கிளி, கொரில்லா போன்ற பல விலங்குகளுக்கும் இசையை வெளியிட்டு இருக்கிறோம். ஆனாலும் நாய்களுக்குத்தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறோம். நாய்களைப் போல இசையைக் கேட்கக்கூடிய விலங்கு வேறு இல்லை. அதிலும் அழகற்ற, ஆதரவற்ற நாய்கள் மனிதர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்குகின்றன. இந்த நாய்களுக்காகவே சிறப்பு இசையை வெளியிட்டிருக்கிறோம். இந்தப் பாடல்களைக் கேட்கும்போது அவற்றின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. ஓரிடத்தில் ஆயிரம் நாய்கள் இருந்தாலும் இந்த இசையைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன’’ என்கிறார் இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஸ்கைப் ஹெய்ன்ஸ்.

இன்னும் கொஞ்ச நாளில் நாய்களே இசையமைக்குமோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x