Published : 10 Mar 2016 10:30 AM
Last Updated : 10 Mar 2016 10:30 AM

உலக மசாலா: இவரல்லவோ நல்ல கணவர்?!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகானத்தில் வசிக்கும் டாமி சொன்னென் குடும்பத்தினருக்கு கடந்த 4 தலைமுறைகளாக கால்நடைகள் வளர்ப்பதுதான் முக்கியத் தொழிலாக இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு இந்த கால்நடைப் பண்ணைகள் எல்லாம் வீட்டு விலங்குகளின் பாதுகாப்பு மையங்களாக மாறிவிட்டன! 6 ஆண்டுகளுக்கு முன்பு ரெனீ என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் டாமி. ரெனீக்கு விலங்குகள் மீது அளவற்ற அன்பு. விலங்குகளுக்கு பெயர் சூட்டினார்.

விலங்குகளிடம் அன்பாகப் பேசினார். விலங்குகளிடம் இப்படி அன்பு வைக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் டாமி. ஆனால் ரெனீயின் அன்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டாமிக்கு வேறு வழியில்லை. தன்னை மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். குடும்பமே ‘வீகன்’ உணவுக்கு மாறியது. அதனால் பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய், இறைச்சி சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

“நான் விலங்குகளைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தேன். ஒருவேளை டாமி ஆடு, மாடுகள் விற்பனை செய்யும் தொழிலை கைவிடவில்லை என்றால் நான் அவரை விட்டு விலகும் முடிவில் இருந்தேன். இறுதியில் நான் வெற்றி பெற்றேன். பல தலைமுறைகளாகப் பார்த்து வந்த ஒரு வேலையை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எனக்காக இந்தக் காரியத்தைச் செய்த டாமியை நான் மிக உயர்வாக மதிக்கிறேன்’’ என்கிறார் ரெனீ.

ரொம்ப நல்ல கணவரா இருக்கீங்களே டாமி!

வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் வசிக்கும் லீ பாம் கா டி கடல் கன்னி உடையில் இணையத்தைக் கலக்கி வருகிறாள். 6 மாதக் குழந்தையான லீயின் பெற்றோர் ‘தி மெர்மைட்’ திரைப்படத்தைப் பார்த்தனர். உடனே மிகவும் ஆர்வமாகி, தங்கள் குழந்தைக்கும் கடல் கன்னி ஆடையை அணிவித்து, படங்கள் எடுத்தனர். இந்தப் படங்கள் கடந்த வாரம் இணையத்தில் சூறாவளியாகக் கிளம்பி, பல்லாயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகின்றன!

இந்தக் கடல் கன்னியை யாருக்குத்தான் பிடிக்காது!

இயற்கையில் யாரும் குறையற்றவர்களாக இருக்க முடியாது’ என்பதை மையமாக வைத்து, ஒழுங்கற்ற வடிவங்களில் விளையும் காய்கள், பழங்களை விற்பனை செய்து வருகிறது கனடாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஒன்று. இந்தக் காய்களும் பழங்களும் சாதாரண காய், பழங்களின் விலையை விட 30 சதவிகிதம் குறைவாக இருக்கின்றன.

“பொதுவாக மக்கள் ஒழுங்கற்ற உருவம் கொண்ட காய்கள், ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கும் காய்களை வாங்க மாட்டார்கள். ஆனால் எங்கள் சூப்பர் மார்க்கெட்டில் இவற்றை விற்பனை செய்து வருகிறோம். ஒழுங்கற்ற வடிவமாக இருந்தாலும் இந்தக் காய்களிலோ, பழங்களிலோ சுவை குன்றுவதில்லை, கெடுதல் இல்லை என்பதைப் புரிய வைத்தோம். இந்த விழிப்புணர்வுக்குப் பிறகு ஒழுங்கற்ற வெங்காயம், குடை மிளகாய், காளான் போன்றவற்றையும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். இயற்கை அன்னை எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக வடிவமைத்து விடுவதில்லை. இவற்றைக் கண்களை மூடிக் கொண்டு உண்டால் எந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணரப் போவதில்லை’’ என்கிறார் இந்த சூப்பர் மார்க்கெட்டின் துணைத் தலைவர் இயான் கார்டன்.

உருவத்தைக் கண்டு எடை போடக்கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x