Published : 14 Jun 2014 10:53 AM
Last Updated : 14 Jun 2014 10:53 AM

அமெரிக்காவில் ஒபாமாவுக்கு ஆதரவு குறைந்தது

அமெரிக்காவில் ஒபாமாவுக்கு மக்களிடையே இருந்த ஆதரவு முன்பு எப்போதும் இல்லாத அளவாக 47 சதவீதமாக குறைந்துள்ளது.

அமெரிக்காவில் அதிபருக்கு மக்களிடையே உள்ள ஆதரவு குறித்து அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் சிஎன்என் ஓஆர்சி சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு 47 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு ஒபாமாவுக்கு மக்கள் அளித்த ஆதரவு இந்த அளவுக்கு குறைந்ததில்லை. ஒபாமாவுக்கு முன்பு அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் மட்டுமே மக்களிடையே மிகக்குறைந்த அளவு ஆதரவைப் பெற்ற அதிபர் என்ற நிலையில் இருந்தார். அவருக்கு 46 சதவீதம் பேர் அப்போது ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இப்போது ஒபாமாவும் ஏறக்குறைய புஷ்ஷின் நிலையை எட்டியுள்ளார். அவர் 47 சதவீத ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். அதே நேரத்தில் 51 சதவீதம் பேர் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. முன்பு புஷ்ஷுக் கும் 51 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதன் மூலம் அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களில் பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்புக்கு உள்ளானவர்களில் புஷ் இடத்தை ஒபாமாவும் பிடித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஹிலாரி கிளிண்டனுக்கும் மக்களிடையே இருந்த ஆதரவு குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு 67 சதவீத ஆதரவு இருந்தது. இந்த ஆண்டு மார்ச்சில் இது 57 சதவீதமாக குறைந்தது. இப்போது 55 சதவீதம் என்ற அளவை எட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x