Last Updated : 11 Feb, 2016 09:15 PM

 

Published : 11 Feb 2016 09:15 PM
Last Updated : 11 Feb 2016 09:15 PM

லஷ்கர், ஜெய்ஷ் தீவிரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ பயிற்சி அளிக்கிறது: முஷாரப்

லஷ்கர்-இ-தாய்பா மற்றும் ஜெய்ஷ் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளிக்கிறது. காஷ்மீர் என்ற மையப்பிரச்சினையை இந்தியா தொடாமல் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து இந்தியா தப்பிக்கும் வாய்ப்பில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே டிவிக்கு முஷாரப் அளித்த நேர்காணலில் கூறியதாவது:

பாகிஸ்தானின் இண்டர் சர்வீசஸ் இண்டெலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ), லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கவில்லை. எங்கள் தரப்பு உளவு அமைப்பும் உங்கள் தரப்பு உளவு அமைப்புகளுமே இத்தகைய பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் நிற்க வேண்டுமெனில், நீங்கள் காஷ்மீர் என்ற மையப்பிரச்சினை குறித்து பேச வேண்டும். இந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாத, தீவிரவாதச் செயல்கள் தொடரவே செய்யும், காஷ்மீர் பிரச்சினையை நாம் பேசித்தீர்க்காத வரையில் இதற்கு முடிவில்லை. ஆனால் இதைத்தான் நீங்கள் செய்ய விரும்புவதில்லை.

காஷ்மீர் விவகாரம் தொடர்ந்து பாகிஸ்தானில் உணர்வுகளை தட்டி எழுப்பி வருகிறது. காஷ்மீரில் சண்டையிடுபவர்கல் சுதந்திர போராட்ட வீரர்கள்.

காஷ்மீர் விவகாரத்தில் நாம் இன்னும் முன்னேற்றம் காணவில்லை. காரணம் நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் எங்களை நசுக்கித் தரைமட்டமாக்க விரும்புகிறீர்கள், எங்களை பலவீனப்படுத்த விரும்புகிறீர்கள், எங்களை ஆதிக்கம் செலுத்த விரும்புகிறீர்கள். அதாவது உங்களுக்குக் கவலையளிக்கும் பதான்கோட், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றியே பேசுகிறீர்கள். எனவே மையப்பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

தற்போது வாக்குமூலம் அளித்து வரும் ஹெட்லி கூறுவது எதையும் நான் நம்ப மாட்டேன். பாகிஸ்தான் உளவு அமைப்பு ஹெட்லியை விசாரிக்க வேண்டும்.

ஜே.இ.எம். தலைவர் மெசூத் அசார் மட்டுமல்ல பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டால் அவர் பயங்கரவாதிதான், அவர் என் மீது தாக்குதல் நடத்த முயன்றார் என்பதை நான் அறிவேன். அதனால் அவர் பயங்கரவாதி என்றே நான் கூறுவேன்.

ஆனால் லஷ்கர் மற்றும் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

பாகிஸ்தான் பற்றி உங்கள் நாட்டில் நீங்கள் ஒரு வெறி/பீதி நிலையை (ஹிஸ்டீரியா) உருவாக்குகிறீர்கள். நாங்கள் எப்போது பேச்சு வார்த்தைக்கு முயற்சி செய்தாலும் நீங்கள் எங்களை உங்கள் பார்வைக்கு எங்களை இடித்துத் தள்ளப்பார்க்கிறீர்கள்.

இவ்வாறு கூறிய பர்வேஸ் முஷாரப், இந்திய உளவு நிறுவனமான ‘ரா’ ஆப்கானிலிருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x