Last Updated : 19 Feb, 2016 04:47 PM

 

Published : 19 Feb 2016 04:47 PM
Last Updated : 19 Feb 2016 04:47 PM

எல் நினோ விளைவு வலுவிழந்து வந்தாலும் தாக்கம் நீடிக்கும்: ஐ.நா. எச்சரிக்கை

கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வெப்பநிலை, வறட்சி, வரலாறு காணாத மழை, வெள்ளம், பெரிய அளவில் காட்டுத் தீ ஆகியவற்றுக்குக் காரணமான எல் நினோ விளைவு அதன் உச்சபட்ச வலுவை இழந்திருக்கலாம் ஆனால் தொடர்ந்து வரும் மாதங்களில் அதன் தாக்கம் நீடிக்கும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

ஆனால் உலக வானிலை ஆய்வு மையமோ, உலக வானிலையில் பெரிய நாசத்தை விளைவித்த எல்நினோ இன்னும் வலுவாகவே உள்ளது என்றும் அதன் தாக்கம் தெற்கு ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய ஆப்பிரிக்க சமூகங்களிடையே வெளிப்படையாக மிக அதிக அளவில் தெரியவருகிறது என்று கூறுகிறது.

சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் எல்நினோ என்பது எல் நினோ என்பது பூமியின் வெப்பநிலை ஏற்றத்தாழ்வை குறிப்பது ஆகும். உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் நிலவும் வெப்ப நிலையின் ஏற்றத்தாழ்வை பொறுத்து எல் நினோவின் தாக்கம் கண்டறியப்படுகிறது. எல் நினோ ஏற்படும்போது ஒருபுறம் அதிக மழையும் மறுபுறம் கடும் வறட்சியும் நிலவும்.

இதனால் மேற்கு அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா வரை, இந்தியா, இந்தோனேசியா, மற்றும் ஆஸ்திரேலியாவில் கடுமையான, தீவிர பருவநிலை மாற்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

இந்த வாரத்தின் தொடக்கதில் ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பு எச்சரிக்கும் போது, எல்நினோ விளைவினால்சுமார் 10 கோடி மக்கள் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டாக வேண்டும் என்று கூறியிருந்தது.

2015-16 எல்நினோ விளைவை 1997-98 எல்நினோ விளைவுடன் அதன் வலு அளவில் ஒப்பிட முடியும் என்றாலும் 2015-16 எல்நினோ இத்தனையாண்டுகளில் மிகவும் வலுவானது என்று அறுதியிட முடியாதது என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது பற்றி உலக வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைமைச் செயலர் பெட்டெரி தாலாஸ் கூறும்போது, “வானிலை ஆய்வு மைய சொற்பொருளின் படி இந்த எல்நினோ தற்போது கொஞ்சம் வலுவிழந்துள்ளது என்றாலும் பொருளாதார மற்றும் மனித சமுதாயங்களில் அது ஏற்படுத்தும் தாக்கம் என்ற அளவில் இன்னும் வலுவாகவே உள்ளது. இதன் தாக்கம் வரும் பல மாதங்களுக்கும் தொடர வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிகா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் இன்னமும் கடுமையான மழை வெள்ளத்திலிருந்து மீண்டு வருகிறது. வறட்சியின் பொருளாதார மற்றும் மானுட இழப்பு தெற்கு ஆப்பிரிக்கா, ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் அதிகம் வெளிப்படையாக தற்போது தெரியவருகிறது” என்று எச்சரித்துள்ளார்.

‘எல் நினோ’ பருவ நிலை மாற்றம் காரணமாகவே தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது என்று ஐ.நா. சபை ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழு வதும் சராசரியைவிட அதிக மழை பொழிந்துள்ளது. பொது வாக வடகிழக்குப் பருவமழை யின்போது சென்னையில் 79 செ.மீட்டர் மழைப் பொழிவு இருக் கும்.2015-ம் ஆண்டில் 150 செண்டி மீட்டர்களுக்கும் அதிகமாக மழை பொழிந்துள்ளது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி அன்று 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை கொட்டியது. டிசம்பர் 4-ம் தேதி 40 செ.மீ. மழை பெய்தது.

இவையெல்லாம் எல்நினோ விளைவுகளே. இந்நிலையில் எல்நினோ 2016 இரண்டாம் காலாண்டில் மறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.


தி கார்டியன் நியூஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x