Published : 24 Jun 2014 12:39 PM
Last Updated : 24 Jun 2014 12:39 PM

கிளிர்ச்சியாளர்கள் பிடியில் இராக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

இராக் தலைநகர் பாக்தாத்தில் வடக்கு பிராந்தியத்தின் சலாவுதீன் நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முழுமையாக கிளிர்ச்சியாளர்கள் கட்டுக்குள் வந்தது.

இராக்கில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.(லெவண்ட்) படைகள், பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குள் 10 நாட்களுக்கு முன்னர் நுழைந்தது.

முதலில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் சிறைபிடித்த கிளிர்ச்சியாளர்கள் பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது முழுமையாக அந்நிலையத்தை கைப்பற்றியுள்ளது.

இடையில், இராக் ராணுவ தாக்குதல் காரணமாக சிறு பின்னடைவு ஏற்பட்ட போதும் அதை சமாளித்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் கிளிர்ச்சியாளர்கள்.

இந்நிலையில், "பாய்ஜி சுத்திகரிப்பு நிலையத்தை முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது, அது உள்ளூர் பழங்குடியின தலைவர்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படும்" என கிளிர்ச்சிப் படைகள் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தான் இராக்கின் பெரும்பான்மை பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கிளிர்ச்சியாளர்கள் பிடியில் பாய்ஜி நிலயம் வந்துள்ளதை அடுத்து நாட்டின் மற்ற பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கைப்பற்றுவது கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு வகையில் கட்டாயமாக இருந்தது. அப்போதுதான், மோசுல் நகரில் முகாமிட்டிருக்கும் தங்கள் படைகளுக்கு தேவையான எரிசக்தியை வழங்க முடியும் என்ற நிலை இருந்தது. அதனாலேயே, கிளர்ச்சியாளர்கள் பாய்ஜி-யை முதலில் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என பிபிசி செய்தியாளர் ஜிம் முயிர் தெரிவித்துள்ளார்.

இராக்கின் 2-வது பெரிய நகரான மோசுல் நகர், பாக்தாத்தின் மேற்கு மறும் வடக்கு பகுதிகள், சிரியா, ஜோர்டான் நாடுகளுக்குச் செல்லும் எல்லைப் பகுதிகள் என முக்கிய இடங்கள் அனைத்தும் கிளிர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கிறது. தற்போது ஹதிதா அணையை நோக்கி முன்னேறி வருகின்றன.

மிகப்பெரிய அணையான ஹதிதாவுக்கு சேதம் விளைவிக்கப்படும் பட்சத்தில் பெரும் வெள்ளச்சேதம் ஏற்படும். இந்நிலையில், 'நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம்' என சூளரைத்துள்ளார் ஐ.எஸ்.ஐ.எஸ். செய்தித்தொடர்பாளர்.

இராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ். படைகள் கை ஓங்கி வரும், அடுத்த சில நாட்களில் நிலைமை மிகவும் மோசமடைய வாய்ப்பிருப்பதால், இராக்குக்கான உதவி மேலும் அதிகரிக்கப்படும் என பாக்தாத் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

இராக் பிரதமர் நூரி மாலிகி மற்றும் அந்நாட்டின் ஷியா, சன்னி பிரிவினரின் முக்கிய தலைவர்களுடனும் கெர்ரி ஆலோசனை மேற்கொண்ட அவர் குர்திஷ் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னணியில், இரான், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசை இராக்கில் அமைக்க முயற்சி நடந்துவருவதாக தெரிகிறது.

ஷியா பிரிவைச் சேர்ந்த மலிக்கி, அதிகாரத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதும், சன்னி, குர்தீஷ் இனத்தவருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாததுமே கிளிர்ச்சிக்கு காரணம்.

இந்நிலையில், ஜூலை 1-ல் இராக் நாடாளுமன்றம் கூடும்போது, பிரதமர் மலிக்கிக்குப் பதிலாக புதிய பிரதமர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராக் - சிரியா எல்லையை ஒட்டியுள்ள அன்பர் மாகாணம் கிளிர்ச்சியாளர்கள் பிடியில் உள்ளது. ஜோர்டானுடன் இணைக்கும் டிரேபில் கிராஸிங்கும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. இதனால், ஜோர்டான் எல்லையில் அந்நாட்டு ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளது.

2011-ல் இராக்கில் இருந்து அமெரிக்கா படைகளை திரும்பப்பெற்ற போதும் தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இராக் ராணுவத்திற்கு ஆலோசனை வழங்கு 300 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது.

இராக் பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர், இராக் நிலவரம் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, சர்வதேச அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் என ஜான் கெர்ரி கூறியிருந்தார்.

ஆனால், இராக் விவகாரத்தில் அமெரிக்க தலையீட்டை தேவையற்றதாகவே பார்க்கிறது இரான். அந்நாட்டுத் தலைவர் அயதுல்லா கோமெனி, "அமெரிக்கா தனது தலையீட்டின் மூலம் இராக்கை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தனக்கு சாதகமான ஆட்சியாளர்களை அமரவைத்து மறைமுக ஆட்சி செலுத்த முற்படுகிறது" என குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x