Last Updated : 30 Nov, 2015 03:22 PM

 

Published : 30 Nov 2015 03:22 PM
Last Updated : 30 Nov 2015 03:22 PM

எதிர்ப்புகளையும் மீறி அண்டார்டிகாவில் ஜப்பான் திமிங்கில வேட்டை

கடும் எதிர்ப்புகளுக்கிடையே அண்டார்டிகாவில் 3 மாதகால திமிங்கில வேட்டைக்காக ஜப்பான் கப்பல் செவ்வாயன்று அண்டார்டிகா புறப்பட்டது.

சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு திமிங்கில வேட்டை அறிவியல்பூர்வமாக இல்லை என்று கூறியதையடுத்து ஜப்பான் திமிங்கில வேட்டையை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் திமிங்கில வேட்டைக்கு ஜப்பான் ஆயத்தமாகியுள்ளது. ஆராய்ச்சிக்காக திமிங்கிலங்களை கொல்வது அவசியமாகிறது என்ற ஜப்பானிய வாதத்தை சர்வதேச திமிங்கில ஆணையம் ஏற்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜப்பான் மீன்பிடி முகமை, 2015/16-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட திமிங்கில வேட்டைத் திட்டத்தை சர்வதேச திமிங்கில ஆணையத்திடம் அளித்திருந்தது. அதாவது மின்கி ரக திமிங்கிலங்களை பிடிப்பதை ஆண்டுக்கு 333-ஆக குறைப்பதாகவும், இது அறிவியல் ரீதியாக சரியானது என்றும் ஜப்பான் தெரிவித்திருந்தது.

ஜப்பானின் உணவுக் கலாச்சாரத்தில் திமிங்கில இறைச்சி ஒரு பகுதி என்பதால் ஜப்பான் கடும் திமிங்கில வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

ஜப்பானின் அண்டார்டிகா திமிங்கில வேட்டைக்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய செனேட்டில் அட்டார்னி ஜெனரல் ஜார்ஜ் பிராண்டிஸ் கூறும்போது, "ஜப்பானின் இந்த முடிவால் ஆஸ்திரேலியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது, ஜப்பான் தன் மனநிலையை மாற்றிக் கொள்ள எந்த வித உயர்மட்டத்தையும் ஆஸ்திரேலியா அணுகும்” என்று கூறினார்.

ஜப்பானைத் தடுப்பதில் சர்வதேச திமிங்கில ஆணையம் தோல்வியடைந்தால், ஆஸ்திரேலியா ரோந்துப் படகுகளை அனுப்பும் என்று கூறினார் பிராண்டிஸ்.

அதாவது என்ன மாதிரியான நடவடிக்கையை ஆஸ்திரேலியா தனது ரோந்துப் படகு மூலம் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவிக்க மறுத்த அவர், சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த சாட்சியங்களைத் திரட்டுவோம் என்றார்.

ஜப்பானில் திமிங்கில இறைச்சிக்கு கிராக்கி அதிகம் இல்லாததால் சமீப காலங்களில் அதன் திமிங்கில வேட்டை குறைக்கப்பட்டது. மேலும் திமிங்கில வேட்டைக்கு எதிரான ஸீ ஷெப்பர்ட் என்ற அமைப்பும் ஜப்பானின் திமிங்கில வேட்டை திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது.

சர்வதேச திமிங்கில ஆணையம் 1986-ம் ஆண்டு திமிங்கில வேட்டைக்கு வர்த்தக ரீதியிலான தடை விதித்தது, ஆனால் ஆராய்ச்சிக்காக திமிங்கில வேட்டைக்கு ஜப்பானுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x