Last Updated : 19 Nov, 2015 10:07 AM

 

Published : 19 Nov 2015 10:07 AM
Last Updated : 19 Nov 2015 10:07 AM

பாரீஸ் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பதில் சிக்கல்- அமெரிக்காவில் குடியரசு கட்சி எதிர்ப்பு

பிரான்சில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்காவில் சிரியா அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வலியுறுத்தி உள்ளது. இது அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவின் திட்டத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.

கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 130-ஐ தாண்டி உள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதி கொல்லப்பட்ட நிலையில் அவனிடம் சிரியா பாஸ்போர்ட் இருந்தது தெரியவந்தது. இதனால் அகதிகளாக வந்தவர்கள்தான் தாக்குதலை நடத்தி உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், இதே பாணியில் இங்கும் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சிரியா அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர் பால் ரையன் வலியுறுத்தி உள்ளார். இவரது இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி (குடியரசு கட்சி) உறுப்பினர்கள், பாதிக்கும் மேற்பட்ட மாநில ஆளுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் அடைக்கலம் வழங்குவதற்கு முன்பு, புலனாய்வு அதிகாரிகள் அகதிகளிடம் தீவிர விசாரணை நடத்தி தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிரியா, இராக் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் திட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பாக ஒரு மசோதாவைக் கொண்டுவரவும் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இந்த மசோதா நிறைவேறினால், 2016 நிதியாண்டில் 10 ஆயிரம் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என்ற ஒபாமாவின் திட்டம் கேள்விக்குறியாகிவிடும்.

இதுகுறித்து ஒபாமா கூறும்போது, “அச்ச வெறியுடனும் அதிக அளவில் எச்சரிக்கை உணர்வுடனும் இருந்தால் நம்மால் சரியான முடிவு எடுக்க முடியாது. விதவைகளும் அநாதைகளும்தான் சிரியாவிலிருந்து அகதிகளாக வருகின்றனர். அவர்களுக்கு தஞ்சம் அளிக்க வேண்டியது நமது கடமை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x