Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM

ஜப்பான் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ட்விட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை

ஜப்பான் நாட்டில் ட்விட்டர் கொலையாளி என்று அழைக்கப்பட்டவருக்கு மரண தண்டனையை அந்தநாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

ஜப்பானில் தகாஹிரோ சிராய்ஷி என்ற 29 வயது இளைஞர், 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்து போலீஸாரிடம் சிக்கினார். இவரை ‘ட்விட்டர் கொலையாளி’ என்று ஜப்பானில் அழைத்து வருகின்றனர்.

இவர் 2017-ம் ஆண்டு ட்விட்டரில் கணக்கு தொடங்கினார். ட்விட்டர் பக்கத்தில் தனது சுய விவரத்தை சிராய்ஷி குறிப்பிடும்போது, “ உண்மையில் வேதனையில் இருப்பவர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன். தயவுசெய்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு தகவல் அனுப்புங்கள்” என கூறியிருந்தார்.

இப்படி அவரை தொடர்புகொண்ட 8 பெண்களை அவர் கொலை செய்துள்ளார். ஆனால் எப்படி கொலை செய்தார் என்றவிவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் ஒரு ஆடவரையும் கொலை செய்துள்ளார் சிராய்ஷி. அதுவும் அந்த ஆண் தனது காதலியின் இருப்பிடம் தொடர்பாக சிராய்ஷியுடன் மோதிக்கொண்டதையடுத்து, அவரை கொலை செய்துள்ளார்.

ஒரு இளம்பெண் மாயமாகிஅவரை போலீஸார் தேடியபோதுதான் சிராய்ஷி குறித்த விவரம் போலீஸாருக்கு தெரிய வந்தது. டோக்கியோவுக்கு அருகில் உள்ளஜூமா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றபோதுதுண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் பாகங்களை கண்டெடுத்தனர். இந்த தொடர் கொலை சம்பவங்கள் ஜப்பானை உலுக்கின.

இதைத் தொடர்ந்து சிராய்ஷி கைது செய்யப்பட்டு அவர் மீதான வழக்கு விசாரணை, டோக்கியோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் சிராய்ஷிக்கு நேற்று மரண தண்டனையை டோக்கியோ நீதிமன்ற நீதிபதி வழங்கினார்.

நீதிபதி தீர்ப்பை வழங்கும்போது நீதிமன்றத்தில் 435 பேர் கூடியிருந்தனர். ஆனால் அந்த நீதிமன்றத்தில் 16 இருக்கைகள் மட்டுமேபோடப்பட்டிருந்தன. அதையும் மீறி ட்விட்டர் கொலையாளிக்கு வழங்கப்படும் தண்டனை விவரத்தைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x