Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

கறுப்பினத்தவர்களுக்கு வீட்டில் இடம் தந்து காப்பாற்றியதால் பிரபல ‘டைம்’ இதழ் ஹீரோக்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியினருக்கு கவுரவம்

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தை சேர்ந்தவரை, கடந்த மே மாதம் 25-ம் தேதி போலீஸார் சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். டெர்ரக் சவுவின் என்ற போலீஸ்காரர், அவரை கீழே தள்ளி கழுத்தில் கால் வைத்து அழுத்திய போது மூச்சுத்திணறி பிளாய்ட் இறந்தார். இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பின், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல பகுதிகளில் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இரவு பகலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கடந்த ஜூன் 1-ம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது, அதில் பங்கேற்ற 70-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகுல் துபே என்பவர் தனது வீட்டில் தங்க இடம் கொடுத்து உதவிகள் செய்தார். இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுகிறார்.

போராட்டத்தை ஒடுக்க இரவு 7 மணிக்கு மேல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அத்துடன் சாலைகளில் தடுப்புகள் அமைத்து, கைகளில் மிளகு பொடிகளுடன் போலீஸார் ஏராளமானோர் காத்திருந்தனர். போராட்டக்காரர்களைக் கைது செய்வதற்கு போலீஸார் காத்திருந்தனர்.

அதைப் பார்த்த ராகுல் துபே, உடனடியாக தனது வீட்டுக் கதவைத் திறந்து, ‘எல்லோரும் உள்ளே வாருங்கள்’ என்று கூச்சலிட்டார். சாலைகளில் தவித்துக் கொண்டிருந்த 70-க்கும் மேற்பட்டோர் அவர் வீட்டில் தஞ்சம் அடைந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பினர். இவரது வீடும் வெள்ளை மாளிகைக்கு அருகில்தான் உள்ளது. போலீஸாரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய கறுப்பின மக்கள் அன்று இரவு துபே வீட்டில் தங்கினர். அதன்மூலம் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் இருந்து தப்பினர். மறுநாள் துபேவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு உணர்ச்சி பெருக்குடன் அவர்கள் கிளம்பி சென்றனர். அதன்பின், துபேவின் உதவிகளைப் பாராட்டி, கறுப்பின மக்கள் ட்விட்டரில் சரமாரியாக நன்றி தெரிவித்து பதிவுகள் வெளியிட்டனர். அதுவும் வைரலாக பரவியது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல இதழான ‘டைம்’, 2020-ம் ஆண்டில் ஹீரோக்கள் என்ற தலைப்பில் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ராகுல் துபே இடம்பெற்றுள்ளார். தனது பணிகளைத் தாண்டி, நியாயம் கேட்டு போராடியவர்களுக்கு தக்க நேரத்தில் செய்த உதவிக்காக துபேவை டைம் இதழ் கவுரவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x