Published : 06 Sep 2015 12:14 pm

Updated : 06 Sep 2015 12:15 pm

 

Published : 06 Sep 2015 12:14 PM
Last Updated : 06 Sep 2015 12:15 PM

உலக மசாலா: சூப்பர் பாட்டிகள்!

மெக்ஸிகோவில் வசிக்கிறார் ஜீசஸ் சுய் அக்வேஸ். இவரும் இவருடைய குடும்பத்தில் உள்ள 30 பேர்களும் மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் முகம் முழுவதும் அடர்த்தியான முடிகள் முளைத்திருக்கின்றன. இவர்களை எல்லோரும் ஓநாய் மனிதர்கள் என்று அழைக்கின்றனர். ‘’மரபணு குறைபாட்டால் ஏற்பட்ட இந்தப் பிரச்சினைக்கு இதுவரை மருத்துவம் கண்டுபிடிக்கப் படவில்லை. பார்ப்பவர்களுக்குச் சற்றுப் பயமாக இருக்கலாம். ஆனால் நாங்களும் மனிதர்களே. சாத்தான் வீடு என்று கோபம் கொண்ட சிலர், எங்களின் 20 செல்லப் பூனைகளைக் கொன்றுவிட்டனர். கிண்டல், கோபம், கடினமான சொற்பிரயோகம், அடிதடி என்று எங்கள் மீது ஏதோ ஒரு வன்முறை எப்பொழுதும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் எங்களால் ஒரே இடத்தில் வாழ இயலாது. எங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாது. சரியான படிப்பு இல்லாததால் நல்ல வேலையும் கிடைக்காது. பரிதாபப்பட்டு சிலர் கொடுக்கும் வேலைகளைச் செய்து எங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறோம்’’ என்கிறார் ஜீசஸ். ஓநாய் மனிதன் என்ற தலைப்பில் இவர்களைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. சர்க்கஸ் கம்பெனி மூலம் உலகம் முழுவதும் சுற்றியிருந்தாலும் எல்லா இடங்களிலும் மனிதர்கள் ஒரே மாதிரி சக மனிதர்களைப் புரிந்துகொள்ளாதவர்களாகவே இருக்கிறார்கள் என்கிறார் ஜீசஸ்.

சக மனிதர்களை மதிக்கும் நாகரிகம் எப்பொழுது எல்லோருக்கும் வரப்போகிறதோ…


கேபிஜி84 என்பது ஜப்பானிய பெண்கள் நடத்தும் இசைக்குழு. இந்தக் குழுவில் இருக்கும் 33 பெண்களும் மூதாட்டியர். 84 வயதைக் கடந்தவர்கள். 97 வயது ஹாரு யாமஷிரோதான் மிக வயதான உறுப்பினர். அனைவரும் பாடியபடி ஆடுவார்கள். இந்த இசைக்குழுவை ஜப்பானியர்கள் பெரிதும் விரும்பி வரவேற்கிறார்கள். ’’எங்கள் இசைக்குழுவை எல்லோரும் ஒரு புன்னகையுடன் வரவேற்கிறார்கள். யாரும் எங்களைக் கிண்டல் செய்வதில்லை. எங்கள் பாடல்கள் கடல், மழை, டால்பின், திமிங்கிலம் என்று இயற்கை சார்ந்த கருப்பொருளைக் கொண்டவை. 80 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இந்தக் குழுவில் அனுமதி இல்லை’’ என்கிறார் 86 வயது ஹைடெகோ கெடமோரி. பாட்டிகளின் இசைக்குழுவுக்கு நடுத்தர வயது மக்களே ரசிகர்களாக இருக்கிறார்கள். இசையை ரசிப்பதோடு, பாட்டிகளுடன் உரையாடவும், காபி அருந்தவும் ஆர்வம் காட்டுகிறார்கள். மேடையில் திரைக்குப் பின்னால் மாத்திரைகளை விழுங்குவதும், மருந்துகளைத் தேய்ப்பதுமாக இருக்கும் பாட்டிகள், திரைக்கு முன்னால் வந்துவிட்டால் அத்தனை உற்சாகமாகிவிடுகின்றனர்.

சூப்பர் பாட்டிகள்!

சீனாவில் இருக்கிறது காங்ஸி டோங் என்ற சிறிய கிராமம். இந்த மலைக் கிராமத்தில் உள்ள அத்தனைப் பேரும் குங் ஃபு கலையைக் கற்றவர்கள். மார்ஷியல் கலைகளைக் கற்று, சுயசார்புடன் வாழ்ந்து வருகிறார்கள். கிராமத்தினருக்கு முக்கியத் தொழில் விவசாயம். கால்நடைகள் வளர்ப்பு. விவசாய வேலைகள் போக மீதி நேரத்தை அனைவரும் மார்ஷியல் கலைகள் கற்பதில் செலவிடுகிறார்கள். வயது வரம்பு எதுவும் கிடையாது. குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என்று எல்லோரும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். கிராமத்தினர் அனைவரும் மார்ஷியல் கலைகளைக் கற்றுக்கொள்வதற்கு 2 காரணங்களைச் சொல்கிறார்கள் மற்றவர்கள். புலி, சிறுத்தை, பாம்பு போன்ற விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்காகக் கற்றுக்கொள்ளலாம். பழங்காலத்தில் அண்டை ஊர்களைச் சேர்ந்த மக்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்குக் கற்றுக்கொண்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் யாருக்கும் உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. 123 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மார்ஷியல் கலைகளைக் கற்றுக்கொள்வது ஆச்சரியமானது. இதில் பெண்களும் விதிவிலக்கல்ல.

உதாரண மனிதர்கள்!
உலக மசாலாசூப்பர் பாட்டிகள்உதாரண மனிதர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x