Published : 02 Sep 2015 07:56 AM
Last Updated : 02 Sep 2015 07:56 AM

நல்லிணக்கத்தை மேம்படுத்துவது அவசியம்: இலங்கை அதிபர் சிறிசேனா வலியுறுத்தல்

இலங்கையில் நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்த வேண்டும் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அன்றைய தினம் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக ரணில் கட்சிக்கும் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலை யில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங் கியது. இதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசியதாவது:

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில துணிச்சலான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. முதல்கட்டமாக போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய அரசு முன்னுரிமை அளிக்கும்.

சுதந்திரத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் நாட்டை ஆண்ட கட்சியும் (ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி) 32 ஆண்டுகள் நாட்டை ஆண்ட மற்றுமொரு கட்சியும் (ஐக்கிய தேசிய கட்சி) இணைந்திருப்பது இலங்கை அரசியலில் புதிய திருப்பம் ஆகும்.

நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க எம்.பி.க்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். புதிய அரசின் குறைந்தபட்ச செயல்திட்ட கொள்கையில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (95), தமிழ் தேசிய கூட்டமைப்பு (16), ஜனதா விமுக்தி பெரமுனா (6) ஆகிய கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் சேர்க்கப்படும். அனைத்து கட்சிகள், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

வெளியுறவு கொள்கையைப் பொறுத்தவரை ஆசிய நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். சர்வதேச அரங்கில் நாட்டின் கவுரவம், பெருமை மீண்டும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர் கரு ஜெயசூர்யா, துணை சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த திலங்க சுமதிபால தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x