Last Updated : 08 Sep, 2015 10:25 AM

 

Published : 08 Sep 2015 10:25 AM
Last Updated : 08 Sep 2015 10:25 AM

தவிக்கும் தாய்லாந்து - 5

பூமிபோலின் அண்ணன் ஆனந்தா மன்னரானாலும் அவர்களது மொத்த குடும்பமும் சுவிட்சர்லாந்தில்தான் தொடர்ந்தது. ராஜாங்கக் குழுவின் மூலம் மட்டுமே ஆட்சி நடைபெற்றது. 1938-ல் இரண்டு மாதங்கள் மட்டுமே தாய்லாந்துக்கு வந்தது இந்தக் குடும்பம்.

இதற்கிடையே பூமிபோலுக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் வளர்ந்தது. திறமையான புகைப் படக்காரர் ஆனார். ஜாஸ் இசையிலும் தீவிர ஈடுபாடு. சாக்ஸஃபோன் இசைக் கருவியை வாசிப்பதிலும் வல்லவராக விளங் கினார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு அவர்கள் குடும்பம் தாய்லாந்துக்குத் திரும்பியது.

அப்போதுதான் ஆனந்தா இறந்தார். விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. மன்னர் ஆனந்தா தற்கொலை செய்து கொண்டார் என்ற வாதத்தை இது தள்ளுபடி செய்தது. அரண்மனையைச் சேர்ந்த இரண்டு சேவகர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் தூக்கிலிடப் பட்டனர்.

ஆனந்தாவும், பூமிபோலும் துப்பாக் கிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, பூமிபோலிடமிருந்த துப்பாக்கி தற்செயலாக வெடித்தது. ஆனந்தா இறந்தார் என்ற கதை வெகு வேகமாகப் பரவியது.

பூமிபோல் அரியணை ஏறினாலும் துக்கம் காக்க வேண்டிய 100 நாட்களுக்குள்ளேயே சுவிட்சர்லாந்துக்கு குடும்பத்தினர் திரும்பினார்கள். அங்கு சட்டம் மற்றும் அரசியல், அறிவியல் பாடங் களில் பட்டப்படிப்பை மேற்கொண் டார். வருங் காலத்துக்காகத் தன்னை தயார் செய்து கொள்ளும் எண்ணம். தன் மாமா ரங்சிட் என்பவருக்கு “பவர் ஆப் அட்டர்னி’’ போல ஓர் அதிகாரத்தைக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்தார்.

சுவிட்சர்லாந்தில் இருந்தபோது அதன் அண்டை நாடான பிரான்ஸுக்கு அடிக்கடி விசிட் செய்தார் பூமிபோல். பாரிஸ் நகரில்தான் தன் வருங்கால மனைவியை பார்த்தார். பிரான்ஸுக்கான தாய்லாந்து தூதரின் மகள் அவர்.

ஆட்சியின் தொடக்கத்தில் பூமிபோலுக்கு உண்மையான அதிகாரம் என்பதே இல்லாமல் இருந்தது. ராணுவ ஆட்சியே பிரதானமாக இருந்தது. ராணுவத் தளபதி ப்ளேக் என்பவர் எண்ணற்ற அதிகாரங்களை தன் வசம் குவித்துக் கொண்டார்.

ஆனால் ராணுவ ஜெனரலாக இருந்த சரித் என்பவர் ப்ளேக் மீது குற்றங்களைச் சுமத்தினார். சற்றே கலவரம் அடைந்த ப்ளேக், மன்னர் பூமிபோலை அணுகி தன் அரசுக்கு ஆதரவளிக்கச் சொன்னார். பூமிபோலோ “நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள்’’ என்றார். ப்ளேக் மறுத்தார். அன்று மாலையே சரித் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றினார். மன்னரின் ஆதரவு அவருக்குதான். இதைத் தொடர்ந்து நாட்டில் ராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

“ஃபீல்டு மார்ஷல் ப்ளேக்கின் அரசு நம்பகத்தன்மையை இழந்து விட்டது. தவிர நாட்டின் சட்டமும், ஒழுங்கையும் அதனால் சரிவரக் கையாள முடியவில்லை. எனவே அவரது இடத்தை ஃபீல்டு மார்ஷல் சரித் எடுத்துக் கொள்வார். இனி மேல் அவர்தான் நாட்டின் ராணுவத் தளபதி”. இப்படி ஒரு அறிக்கை அரசிடமிருந்து வெளியானது.

இதற்குப் பதில் மரியாதையாக அரசருக்கு பல கெளரவங்களை அறிமுகப்படுத்தினர் ராணுவத் தலைவர் சரித். புத்தமதம் தொடர்பான பல சடங்குகளில் மன்னருக்கே முதல் மரியாதை என்ற வழக்கம் மீண்டும் கொண்டு வரப்பட்டது. (முடியாட்சி மாறி அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி என்று ஆன பிறகு இந்த கவுரவம் மன்னருக்கு அளிக்கப்படாமல் இருந்தது).

அதேபோல் மன்னருக்கு எதிராக மண்டியிடும் பழக்கமும் புதுப்பிக்கப்பட்டது. மன்னர் பூமிபோலின் பிறந்தநாள் (டிசம்பர் 5) தேசிய தினமாக அறிவிக்கப்பட்டது. (அதற்கு முன் மாணவர்கள் புரட்சி நடைபெற்ற ஜுன் 24தான் தேசிய தினமாக இருந்தது).

1957ல் ஆட்சியைக் கைப்பற்றிய சரித், 1963-ல் இறந்தபோது மன்னர் அவருக்கு பெரிய அளவில் அஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். 21 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டது.

இதுவரை எந்த நாட்டின் மன்னரும் அதன் பிரதமருடன் அப்படி அணுக்கமாக இருந்ததில்லை எனும் அளவுக்கு இருந்தது பூமிபோல் - சரித் புரிதல்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x