Published : 15 May 2020 05:46 PM
Last Updated : 15 May 2020 05:46 PM

பெருந்தொற்றுக்கு நடுவே விழித்தெழும் ஆப்பிரிக்கா!

நவீன யுகத்தில் யாரும் கண்டிராத மிக மோசமான பெருந்தொற்று, உலகில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பெருந்தொற்று பரவுவதற்கு முன்னர் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிறுவனங்களைப் பற்றி இன்றைக்கு நினைத்துப் பெருமூச்சு விடுகிறார்கள் மக்கள். ‘ஜூம்’ போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் மாணவர்கள் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டிருப்பது எப்படி என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.

புதிய எதிரி
போர்கள் மூலம் சக மனிதர்களை அழிக்க பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் நாடுகள், புதிய எதிரிக்கு முன்னால் பலமிழந்து நிற்கின்றன. பணக்கார நாடுகள் தங்கள் சவக் கிடங்குகளில் சடலங்களை வைக்கவும், இறந்தவர்களை அடக்கம் செய்யவும் இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா நடத்திய போர்களில் கொல்லப்பட்டவர்களைவிட அதிகமான எண்ணிக்கையில், அந்நாட்டு மக்கள் கரோனாவுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தாலியில், காலியாகக் கிடக்கும் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடினார் போப்பாண்டவர். வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு விட்டன. மக்கள் வீடுகளுக்கே தேவாலயங்களைக் கொண்டுவந்து விட்டனர். பிரிட்டன் பிரதமரே கரோனா தொற்றுக்குள்ளாகி, நல்ல வேளையாகக் குணமடைந்துவிட்டார். எனினும், உலகில் அதிக இழப்புகளைச் சந்தித்துவரும் தேசங்களில் அவரது தேசமும் அடக்கம்.

சுத்தமாகும் சுற்றுச்சூழல்
இந்தப் பெருந்தொற்று, சுற்றுச்சூழலைச் சுத்தம் செய்யும் சுத்திகரிப்பானாகவும் இருக்கிறது. வானம் தெளிவடைந்துவிட்டது. மக்கள் மீண்டும் சுத்தமான காற்றைச் சுவாசிக்கின்றனர். மாசுபாட்டின் துயரம் விலகி படைப்பின் அழகு வெளிப்படுகிறது. டால்பின்கள் கடற்கரைக்கு அருகில் வந்து செல்கின்றன. அழிந்துவிட்டவை என்று கருதப்பட்ட விலங்குகள் மீண்டும் தலைகாட்டுகின்றன.

மாறிவரும் சூழல்
இன்றைக்கு, பொருட்களை உற்பத்தி செய்து, உலகமெங்கும் ஏற்றுமதி செய்கிறது ஆப்பிரிக்கா. இந்தப் பெருந்தொற்றுக்கு முன்பு இப்படியான சூழல் இருக்கவில்லை. பல ஆப்பிரிக்க நாடுகள், மற்றவர்களைக் கொண்டாடியதுடன், சொந்த மக்களைப் புறக்கணித்து வந்தன. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதை மக்கள் பெருமையாகக் கருதினர்.

தங்கள் சொந்த நாட்டின் சுகாதார அமைப்புகளைச் சீரமைக்காத தலைவர்கள், தங்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள மில்லியன் கணக்கில் செலவு செய்து அயல் நாடுகளுக்குச் சென்று வந்தனர். இதனால் உள்நாட்டு மக்கள், மோசமான சுகாதாரச் சூழலில் உழன்று கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில், பிரிட்டனில் சிகிச்சை எடுத்துக்கொண்டே தனது நாட்டின் நிர்வாகத்தை நடத்திவந்தார் நைஜீரிய அதிபர். தலைமைப் பணியாளர் மூலம், கோப்புகள் அதிபரின் கையெழுத்துக்காக பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சாதாரண சளிக்குக்கூட சிகிச்சை எடுத்துக்கொள்ள, தங்கள் சொந்த விமானத்தில் வெளிநாடுகளுக்குப் பறந்தனர் நைஜீரிய மேட்டுக் குடியினர்.

பின்னர், நைஜீரியாவின் தலைமைப் பணியாளருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. நாட்டின் 20 கோடி மக்களும் பயன்படுத்தும் உள்ளூர் மருத்துவமனைகளில் ஒன்றைத்தான் அவர் நாட வேண்டியிருந்தது. விளைவு? அவர் மரணமடைந்தார். அதிபரின் மெய்க் காப்பாளரும் கரோனா தொற்றால் உயிரிழந்தார். மேட்டுக் குடியினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான இடைவெளி அழிக்கப்பட்டுவிட்டது. இது புதிய வாழ்க்கை முறையின் தொடக்கமாகியிருக்கிறது.

புதிய திருப்புமுனை
ஆப்பிரிக்காவுக்கு ஒரு திருப்புமுனையாகக் கோவிட்-19 அமைந்திருக்கிறது. முந்தைய பேரழிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்கர்கள், இந்த வைரஸை எதிர்கொள்வதற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். வெளியில் நடப்பனவற்றைக் கவனிப்பதற்கு முன்னதாக, உள்ளார்ந்த பார்வையை அவர்கள் செலுத்தியிருக்கிறார்கள். அதற்குப் பலன்களும் ஏற்பட்டிருக்கின்றன.

இன்றைக்குக் கட்டளையிடுவதற்காகவோ, நிபந்தனைகளை விதிப்பதற்காகவோ உலகம் ஆப்பிரிக்காவுக்கு வருவதில்லை. மாறாக, விருந்தோம்பலையும் சுறுசுறுப்பான செயல்பாடுகளையும் கற்றுக்கொள்ளவே வருகிறது. உலகம் இப்போது ‘மேட் இன் ஆப்பிரிக்கா’ தயாரிப்புகளால் நிரம்பி வழிகிறது. ஆப்பிரிக்கர்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காண்பது என்று கற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டதால், கல்வியும் புரட்சிமயமாகத் தொடங்கியிருக்கிறது.

நகலெடுப்பதைத் தவிர்த்துவிட்டு, புத்தாக்க முயற்சிகள் வெற்றிபெறுவதைப் பார்க்கும் வகையில் ஆப்பிரிக்கர்களின் கண்கள் திறந்துவிட்டன. ஆழ்ந்த நித்திரையிலிருந்து கண்விழித்து ஒரு புதிய உலகுக்குள் நுழைகிறது ஆப்பிரிக்கா. மீண்டும் சொல்கிறேன். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், நாம் என்றென்றைக்கும் பிறரைச் சார்ந்திருப்பவர்களாகவே இருக்க வேண்டியிருக்கும்.

- வாலே அகின்யேமி, நன்றி: ‘தி ஈஸ்ட் ஆப்பிரிக்கன்’ (கென்யாவிலிருந்து வெளியாகும் வாரச் செய்தித்தாள்)
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x