Last Updated : 08 Apr, 2020 08:01 AM

 

Published : 08 Apr 2020 08:01 AM
Last Updated : 08 Apr 2020 08:01 AM

சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல, உலகையே தோற்கச் செய்து விட்டது உலகச் சுகாதார அமைப்பு, விசாரணை தேவை: அமெரிக்க செனேட்டர் ஆவேசம் 

உலகச் சுகாதார அமைப்பு சீனாவை மையப்படுத்தி செயல்படுகிறது என்று கூறி அதற்கான அமெரிக்க நிதிப்பங்களிப்பை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து அமெரிக்க செனேட்டர் ஜிம் ரிஸ்ச் என்பவர் உலகச் சுகாதார அமைப்பின் மீது தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று அதிரடிக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

செனேட்டின் அயுலுறவு கமிட்டியின் சேர்மனும் ஆன ஜிம் ரிஸ்ச் கூறும்போது, “உலகச் சுகாதார அமைப்பு அமெரிக்க மக்களை மட்டுமல்ல கோவிட்-19 விவகாரத்தை அது கையாண்ட விதத்தில் உலகையே தோற்கச் செய்துள்ளது.

உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ர்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் உலகச் சுகாதாரத்தின் குறைந்த பட்ச வெளிப்படைத்தன்மையைக் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலியுறுத்தவில்லை. உலகம் கரோனா கொள்ளை நோயைத் தடுக்கும் திறனையும் இதன் மூலம் மறைத்துள்ளது. உலகச் சுகாதார அமைப்பு என்ற பெயரை வைத்து கொண்டு சீன அரசின் அரசியல் கைப்பாவையாக அது மாறியதை முற்றிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது

எனவே கோவிட்-19-ஐ உலகச் சுகாதார அமைப்பு கையாண்ட விதம் குறித்த தனிப்பட்ட விசாரணை தேவை.

எங்களது வரிசெலுத்தும் மக்களின் மதிப்பு மிக்க டாலர்கள் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான முதலீடாக இருக்க வேண்டுமே தவிர நோயை மறைப்பதற்கும் பலர் உயிரிழப்பதற்குக் காரணமான செயல்களுக்கும் உதவுவதாக இருந்து விடக்கூடாது” என்று கடுமையாகச் சாடினார்.

அதே போல் பிற செனேட்டர்களும் செவ்வாயன்று உலகச் சுகாதார அமைப்புக்கு அமெரிக்க நிதிப்பங்களிப்பை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் கேப்ரியேசஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கை ரெஸ்செந்தலர் என்பவர் கூறும்போது, “கோவிட்-19 அச்சுறுத்தலை சீன கம்யூனிஸ்ட் கட்சி மறைக்க உலகச் சுகாதார அமைப்பு துணை புரிந்தது. இப்போது 12,000 அமெரிக்கர்கள் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் கடுமையாக உயரவிருக்கிறது.

அந்த அமைப்புக்கு அமெரிக்காதான் அதிக பங்களிப்பு செய்து வருகிறது, எங்கள் மக்களின் வரிப்பணம் சீனாவின் பொய்களுக்கும், தகவல் மறைப்புக்கும் பயன்படுதல் கூடாது. தகவல்கள் வெளிப்படையாகியிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். இந்த மசோதா உலகச் சுகாதார அமைப்பை அதன் அலட்சியத்துக்கும் ஏமாற்று வேலைக்கும் பொறுப்பாக்கும்” என்று கடுமையாகச் சாடினார்.

இவ்வாறாக உலகச் சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அமெரிக்கா முழுதும் கடும் கோபம் கிளம்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x