Published : 06 Apr 2020 07:11 AM
Last Updated : 06 Apr 2020 07:11 AM

உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்- ‘ஏர் இந்தியா’வுக்கு பாகிஸ்தான் பாராட்டு

சீனாவில் கரோனா வைரஸ் பரவியபிறகு, அது உலகின் பல நாடுகளுக்கும் தொற்றியது. இதனால் விமானம், ரயில், பேருந்து போக்குவரத்துகளை இந்தியா உட்பட பல நாடுகள் நிறுத்திவிட்டன.

அதன்பிறகு சீனா உட்பட பல நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாநிறுவனம் துணிச்சலாக விமானத்தை இயக்கியது. சீனா, இத்தாலி, பிரிட்டன், ஈரான் போன்ற நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் மட்டுமன்றி, மாலத்தீவு, நேபாளம், இலங்கை போன்றநாட்டினரையும் ஏர் இந்தியா விமானத்தில் அந்த நிறுவனத்தின்ஊழியர்கள் மீட்டுவந்தனர். இதற்காக ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களைப் பல நாட்டுகள் பாராட்டின.அந்த வரிசையில் இப்போது பாகிஸ்தானும் சேர்ந்துள்ளது.

கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு ஏர் இந்தியா நிறுவனம் 2 விமானங்களை இயக்கியது. அவற்றில் நிவாரணப் பொருட்கள் மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை ஏற்றிக் கொண்டு சென்றன. அப்போது, பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்ல அந்நாட்டு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மும்பையில் இருந்து ஏப்.2-ம்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒருவிமானம் புறப்பட்டது. பாகிஸ்தான் வான்வெளிக்குள் மாலை 5 மணிக்கு நுழைந்தோம். அதன்பிறகு அங்குள்ள விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. அப்போது, ரேடியோ அலைவரிசையை மாற்றி தரைக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டோம்.

மறுமுனையில் பாகிஸ்தான் தரைக் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி சொன்ன முதல் வார்த்தை, ஏர் இந்தியா விமான பைலட்டை ஆச்சரியப்படுத்தியது. ‘அஸ் சலாமு அலைக்கும். ஏர் இந்தியா நிவாரண விமானத்தை கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை வரவேற்கிறது’ என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

அதன்பின், ‘பிராங்க்பர்ட் நகருக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்’ என்று பாகிஸ்தான் அதிகாரி கேட்டுள்ளார். அதன்படி, ஏர் இந்தியா விமான பைலட்டும் உறுதி அளித்துள்ளார்.

அதன்பிறகு, ‘‘கரோனா வைரஸ் பாதித்துள்ள இந்த சிக்கலான நேரத்தில் விமானங்களை இயக்கும்உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். குட் லக்’’ என்று பாகிஸ்தான் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்கு, ‘‘மிகவும் நன்றி’என்று நமது பைலட் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் இருந்து ஈரான் வான்வெளி பகுதிக்குள் ஏர் இந்தியா விமானம் நுழைந்தது. அங்கு தரைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் மீ்ண்டும் உதவி செய்தனர். அவர்களே ஈரான் தரைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு இந்திய விமானம் பற்றி தகவல் அளித்து அனுமதி பெற்றுத் தந்தனர்.

கராச்சி வழியாக இந்திய விமானம் சென்றதால், 15 நிமிடங்கள் மிச்சமானது. வழக்கமாக ஈரான் வான்வெளி வழியாக செல்லும் போது பல மணி நேரங்களாகும். ஆனால், ஈரான் அதிகாரிகளும் குறைந்த நேரத்தில் செல்ல கூடிய வான்வெளி வழித் தடத்தில் அனுமதித்தனர்.

அந்த விமானம் இரவு 9.15 மணிக்கு பிராங்க்பர்ட் நகரை சென்றடைய வேண்டும். ஆனால், பாகிஸ்தான், ஈரான் அதிகாரிகள் குறுகிய தூர வான்வெளி வழித்தடத்தில் அனுமதித்ததால் இரவு 8.35 மணிக்கே பிராங்க்பர்ட் நகர் சென்றடைந்தது.

இவ்வாறு ஏர் இந்தியா மூத்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x