Published : 02 Aug 2015 03:50 PM
Last Updated : 02 Aug 2015 03:50 PM

கண்டுபிடிக்கப்பட்ட பாகம் மாயமான எம்.எச். 370 விமானத்தினுடையதே: மலேசியா உறுதி

கடந்த ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச் சம்பவத்தின் புதிர் முடிச்சு அவிழ்ந்துள்ளது என்று மலேசியா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ரீயூனியன் தீவுகளில் கரையில் ஒதுங்கிய விமான பாகம், இறக்கை ஆகியவற்றை பரிசோதித்த போது அது போயிங் 777 எம்.எச்.370 விமானத்துடையது என்பது உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியாங் அறிக்கை ஒன்றில், “கண்டெடுக்கப்பட்ட இறக்கை போயிங் 777 விமானத்தினுடையது என்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.

இந்த பாகம் பிரான்சில் சோதனை செய்யப்பட்டது. போயிங் விமான தயாரிப்பாளர்கள் மற்றும் மலேசிய ஏர்லைன்ஸ் சிவில் ஏவியேஷன் துறையினரும் இதனை உறுதி செய்தனர்” என்றார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது. அதனை தேடும் பணி 16 மாத காலங்களாக நீடித்து வந்தது. அவ்வப்போது சில பாகங்கள் கிடைத்தாலும் அது மாயமான விமானத்தின் பாகமாக கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான இறக்கையைச் சோதித்த போது அது 239 பயணிகளுடன் கடலில் விழுந்த எம்.எச்.370 விமானத்தின் பாகமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x