Last Updated : 07 Jan, 2020 11:35 AM

 

Published : 07 Jan 2020 11:35 AM
Last Updated : 07 Jan 2020 11:35 AM

ஈராக்கில் இருந்து படைகளை வாபஸ் பெறும் முடிவு இல்லை: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

ஈராக்கில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை மீண்டும் திரும்பப் பெறும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என்றும், அவ்வாறு வந்த தகவல் தவறானது என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக அமெரிக்க ராணுவம் 5 ஆயிரம் வீரர்களை பல்வேறு இடங்களில் குவித்துள்ளது. சமீபத்தில் ஈரான் புரட்சிகரப் படையின் தளபதி காசிம் சுலைமானை அமெரிக்க ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொன்றது.

இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளதால் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்தத் தாக்குதலையடுத்து, ஈராக் நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகக் கூடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதில், "ஈராக்கில் நிறுத்தப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானம் குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஈராக்கில் அமெரிக்க அரசு ஏராளமான பொருட்செலவில் பல்வேறு கட்டுமானங்களை எழுப்பியுள்ளது. விமானப் படைத் தளத்தையும் உருவாக்கியுள்ளது. அவற்றுக்கு இழப்பீடு அளித்தால்தான் நாங்கள் ஈராக்கை விட்டு வெளியேறுவோம்" எனத் தெரிவித்தார்.

இந்த சூழலில் அமெரிக்கக் கடற்படையின் ஜெனரல் வில்லியம் ஹெச் சீலே எழுதிய கடிதத்தில், " ஈராக் நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கும், இறையாண்மைக்கும் மதிப்பளிக்கிறோம். எங்கள் படை விரைவில் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

இதனால், ஈராக்கில் இத்தனை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் புறப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அதிபர் ட்ரம்ப், அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேறாது என்று கூறிய நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

ஆனால், இந்தக் கடிதம் வெளியான சில மணிநேரங்களில் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், " ஈராக்கில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் யாரும் வெளியேறுவது குறித்து எந்தவிதமான முடிவும் இன்னும் எடுக்கவில்லை. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்காகத் தயாராகி வருகிறது என்ற செய்தி தவறானது. அங்கிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்கா எந்த முடிவும் எடுக்கவில்லை, எந்தத் திட்டமிடலும் இல்லை.

ஈராக் மற்றும் அதன் பிராந்தியப் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதிலும், அவர்களை அழிப்பதிலும் அமெரிக்க ராணுவம் தீவிரமாக இருந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

ராணுவப் பிரிவின் தளபதி மார்க் மில்லே நிருபர்களிடம் கூறுகையில், "வில்லியம் சீலே எழுதிய கடிதத்தில் தவறுதலாகப் படைகளை வாபஸ் பெறுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுவிட்டது. அந்தக் கடிதத்தில் எந்த அதிகாரியும் கையொப்பம் இடவில்லை. அந்தக் கடிதத்தையும் யாரும் வெளியிடவும் கூடாது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x