Last Updated : 21 Aug, 2015 10:34 AM

 

Published : 21 Aug 2015 10:34 AM
Last Updated : 21 Aug 2015 10:34 AM

பதற்றம் நிறைந்த வங்கதேசம்- 10

வங்கதேசம் உருவான காலகட்டத்தில் அடுத்தடுத்து பலவித நிலைப்பாடுகளை இந்தியாவுக்கு எதிராக எடுத்துத் தள்ளியது அமெரிக்கா. (சோவியத்தின் நட்பு நாடாக இந்தியா இருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம்).

தனது பாகிஸ்தான் ஆதரவு நிலைக்கு தந்திரமாக சீனாவைத் துணைக்கு அழைத்தது அமெரிக்கா. இது தொடர்பாக அமெரிக்க அதிபரின் அரசியல் ஆலோசகரான ஹென்றி கிஸிங்கர் சீனாவுக்குச் சென்றார். ஒருபுறம் மேற்கு பாகிஸ்தானின் வழியாக அமெரிக்கா, மறுபுறம் சீனா ஆகிய இரண்டுமே ஒருசேர இந்தியாவைத் தாக்கினால்? இப்படி ஒரு திட்டமும் அப்போது அலசப்பட்டது. இந்தியாவின் விரோதியான பாகிஸ்தானை நேச நாடாகவே சீனாவும் நினைத்தது. ஆனால் அமெரிக்காவுடன் கைகோர்க்க சீனாவுக்கு தயக்கம். அந்தப் பகுதியில் அமெரிக்காவை வளர்த்துவிட சீனா விரும்பவில்லை.

ஐக்கிய நாடுகளைப் பொறுத்தவரை பாகிஸ்தான் ராணுவத்தால் வங்கதேசத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்டித்து அறிக்கை விட்டது. ‘’உடனடியாக சமாதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாகிஸ்தானின் ராணுவம் திரும்ப அழைக்கப்பட வேண்டும்’’ என்றது.

பாகிஸ்தானின் சரணாகதியைத் தொடர்ந்து வங்கதேசத்தில் கொண்டாட்டம், குதூகலம். உலக நாடுகள் தங்களைத் தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் அடுத்ததாக ஈடுபட்டது வங்கதேசம். ஐ.நா. சபையில் தன்னை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்தது. பல நாடுகள் இதை ஏற்றுக் கொண்டாலும் சீனா மறுத்தது. வங்கதேசம் ஐ.நா. உறுப்பினராவதற்கு அரைமனதுடன் அமெரிக்கா சம்மதித்தது.

இந்த சூழ்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே 1972-ல் ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. சிம்லா ஒப்பந்தம் என்ற பெயர் கொண்ட இது வேறொரு விதத்திலும் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே அமைதி நிலவுவது தொடர்பான ஒப்பந்தம்தான் இது. என்றாலும் வங்கதேசம் என்ற பெயர் கொண்ட புது நாட்டை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது இந்த ஒப்பந்தத்தில்தான்.

இதற்குப் பதிலாக சிறைபிடிக்கப்பட்ட தனது ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றது பாகிஸ்தான். மற்றொரு நிபந்தனையாக (அல்லது கோரிக்கையாக) சமீபத்திய போரில் இந்தியா தன் வசம் கொண்டு வந்திருந்த 13,000 சதுர கிலோ மீட்டர் பாகிஸ்தான் பரப்பைத் திருப்பித்தந்துவிட வேண்டும் என்றது. அப்போது கார்கில் பகுதிகூட முழுவதுமாக இந்தியாவின் வசம் இருந்தது. இதற்கு ஒப்புக் கொண்ட இந்தியா 200 ராணுவ வீரர்களை விடுதலை செய்தது.

இந்தியா மேலும் கடுமையாக பாகிஸ்தானிடம் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஒருசாராரும், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பக்குவப்பட்ட நிலையைக் காட்டுகிறது என்று மறுசாராரும் விமர்சித்தனர். சொல்லப்போனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஒரே காரணத்தினால்தான் புட்டோவின் தலைமை பாகிஸ்தானில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறுவதும் உண்டு.

தங்கள் ராணுவம் சரணடைய நேரிட்டது பாகிஸ்தானுக்கு கடும் அவமானத்தை அளித்தது. யாஹ்யா கானின் சர்வாதிகார ஆட்சி மறைந்தது. புட்டோ ஆட்சியில் அமர்ந்தார்.

ராணுவத் தளபதி நியாஜி என்பவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்தபோது அவர் கடுமையாக எதிர்க்கப்பட்டார். சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தானிய வீரர்களுடன் அவர் இந்தியாவிடம் சரணடைந்தது அங்கு கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. அவர் துரோகியாகக் கருதப்பட்டார். தவிர அமெரிக்கா நீங்கலாக மற்ற நாடுகள் எல்லாமே வங்கதேசத்துக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததை பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

பாகிஸ்தான் ராணுவம் எங்கு தவறு செய்தது என்பதை அறிய நீதியரசர் ரஹ்மான் தலைமையில் ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. அதில் அந்த ராணுவம் செய்த பல தவறுகள் வெளியாயின. தவிர கற்பழிப்புகள் உள்பட அந்த ராணுவத்தினர் செய்த அநீதிகளும் வெளியாகி புட்டோவை சங்கடப்படுத்தியது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x