Published : 09 Nov 2019 05:09 PM
Last Updated : 09 Nov 2019 05:09 PM
கர்தார்பூர் வழித்தடம் இன்று திறக்கப்படும் நிலையில், அயோத்தி தீர்ப்பை சிறிது நாட்கள் காத்திருந்து வழங்கியிருக்கலாம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதிக் காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.
இந்த குருத்வாராவுக்குச் செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கிச் செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர்- குருத்வாராவுக்கு இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது,
கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கூறும்போது, “அயோத்தி தீர்ப்பு சில நாட்கள் காத்திருந்து வழங்கியிருக்கக் கூடாதா? இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் நீங்கள் (இந்தியா) பங்கேற்றிருக்க வேண்டும். கவனத்தைத் திசை திருப்ப முயற்சி செய்திருக்கக் கூடாது. இந்தியாவில் ஏற்கெனவே முஸ்லிம்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் அவர்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது” என்றார்.
பாகிஸ்தான் அறிவியல் துறை அமைச்சர் ஃபவத் ஹுசைன், ''இந்தத் தீர்ப்பு அவமானகரமானது, சட்ட விரோதமானது'' என்று விமர்சித்துள்ளார்.
அயோத்தி தீர்ப்பு
அயோத்தியில் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று (சனிக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்குத் தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.