Published : 26 Aug 2015 10:40 AM
Last Updated : 26 Aug 2015 10:40 AM

உலக மசாலா: கையில் காது!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 45 வயது கலைஞர் ஸ்டெலார்க். அவரது இடது கையில் மூன்றாவதாக ஒரு காது வளர்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு பரிசோதனை முயற்சிக்காக, இடது கையில் ஒரு காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இணைத்துக்கொண்டார். 6 மாதங்களில் அந்தக் காது, ஸ்டெலார்க் உடலுடன் இணைந்துவிட்டது. அதாவது அவரது சொந்த உறுப்புகளைப் போலவே இந்த அந்நிய உறுப்பையும் அவரது உடல் ஏற்றுக்கொண்டுவிட்டது.

‘‘எனக்கு இரண்டு காதுகளும் நன்றாகவே வேலை செய்கின்றன. மூன்றாவது காது இன்னும் கேட்கும் திறனைப் பெறவில்லை. ஆனால் காதைத் திருகினாலோ, தொட்டாலே உணர்ச்சியை உணர்ந்துகொள்கிறது. எதிர்காலத்தில் மேலும் சில பரிசோதனைகள் மூலம் மூன்றாவது காதும் கேட்கும் சக்தியைப் பெறலாம். அப்போது இந்தக் காதையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, ஏராளமான விஷயங்களைச் செய்து பார்க்க இருக்கிறேன்.

இப்போதைக்கு உடலின் எந்தப் பகுதியிலும் எந்த உறுப்பையும் வளர்க்க முடியும் என்ற உண்மை என் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார் ஸ்டெலார்க். இவருக்குச் சிறிய வயதில் இருந்தே உடலியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம். தன்னுடைய உடலில் பல இடங்களில் பரிசோதனை முயற்சிகளைச் செய்து வருகிறார். நுரையீரல், வயிறு போன்றவற்றில் கேமராக்களைப் பொருத்தியிருக்கிறார். ஸ்டெலார்க் பரிசோதனைகளுக்கு நிறையப் பேர் நிதி அளித்து வருகிறார்கள்.

இன்னொரு வாய் வளர்க்கும் முயற்சியில் மட்டும் இறங்கிடாதீங்க ப்ளீஸ்…

ப்ளோரிடாவில் வசிக்கிறார்கள் ஆன்னும் கென் ஃப்ரெடெரிக்ஸும். கடந்த 60 ஆண்டுகளாகத் தங்களுடைய திருமணநாள் அன்று, திருமண கேக்கைச் சுவைத்து வருகிறார்கள். அதாவது 60 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணத்துக்காகச் செய்யப்பட்ட ஃப்ரூட் கேக்கைப் பாதுகாத்து, ஒவ்வோர் ஆண்டும் ஒரு துண்டை எடுத்துச் சுவைத்து வருகிறார்கள். 1955ம் ஆண்டு ஆன்னின் பாட்டி 3 அடுக்குகள் கொண்ட ஃப்ரூட் கேக்கை, தானே செய்து கொடுத்தார். திருமண விருந்தில் சாப்பிட்டது போக, ஓர் அடுக்கு அப்படியே இருந்தது. அதைப் பத்திரமாக எடுத்து, ஓர் உலோக டப்பாவில் போட்டு மூடி வைத்துவிட்டனர். முதல் திருமணநாள் அன்று டப்பாவைத் திறந்து கேக்கைச் சுவைத்தபோது, அது கெட்டுப் போகாமல் அப்படியே இருந்தது. காய்ந்துவிடாமல் இருப்பதற்காக கேக் மீது சிறிது பிராந்தியை ஊற்றி, மீண்டும் டப்பாவில் போட்டு மூடிவிட்டனர். இப்படியே 60 ஆண்டுகளாகத் திருமணநாள் அன்று கேக்கைச் சுவைத்து வருகிறார்கள். இன்றும் கூட கேக் சுவை குன்றாமல் இருக் கிறது என்கிறார்கள். ஆனால் ஆன், கென் தவிர வீட்டில் யாரும் இந்தக் கேக்கைச் சுவைத்துப் பார்க்க விரும்பியதில்லை. ’’60 ஆண்டு களுக்கு முன்பு செய்யப்பட்ட ஒரு உணவுப் பொருளை இன்று சாப்பிடுவது என்பது எவ்வளவு ஆச்சரியமானது! சுவை குன்றாமல் இருப்பதோடு, உடலுக்கும் தீங்கு விளைவிக்கவில்லை’’ என்கிறார் ஆன். 85 வயது கென்னும் 81 வயது ஆன்னும் சமீபத்தில் 60வது திருமணநாளைக் கொண்டாடினர்.

‘‘எவ்வளவோ செலவு செய்து விழா கொண்டாடப்பட்டாலும் ஒரு துண்டு பழைய கேக் சாப்பிட்ட பிறகுதான் எங்களுக்குத் திருப்தியாக இருந்தது’’ என்கிறார் கென்.

ஐயோ... ஜீரணிக்க முடியாத விஷயமா இருக்கே…

ஜெர்மனியில் வசிக்கிறார் 23 வயது லியோனி முல்லர். ஒரு வாடகை வீட்டில் தங்கி, பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். ஆனால் வீட்டின் உரிமையாளர் மூலம் அளவுக்கு அதிகமான பிரச்சினைகள் வந்துகொண்டே இருந்தன. ஒருகட்டத்தில் வீட்டைக் காலி செய்தார். மோசமான அனுபவத்தால் இன்னொரு வாடகை வீட்டுக்குச் செல்ல அவருக்குத் தயக்கமாக இருந்தது. 25 ஆயிரம் ரூபாய்க்கு சீசன் ரயில் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டார். ரயில்களிலேயே வாழ ஆரம்பித்துவிட்டார். குளிப்பது, துவைப்பது, மடிக் கணினியில் வேலை செய்வது என்று அத்தனை வேலைகளையும் ரயிலிலேயே செய்துவிடுகிறார். பல்கலைக்கழகம், அவரது காதலர் வசிக்கும் இடம் என்று தேவையானபோது மட்டும் ரயிலை விட்டு இறங்கிக்கொள்கிறார். ஸ்டேஷனில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுக் கொள்கிறார்.

‘‘30 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்தாலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆனால் 25 ஆயிரம் ரூபாய் ரயில் கட்டணத்தில் நிம்மதியாக இருக்கிறேன். தூங்குவது ஒன்று மட்டுமே கொஞ்சம் சிரமமானது. மற்றபடி ரயில் என்னுடைய வீடாகவே மாறிவிட்டது. படிப்பு முடித்தவுடன் காதலர் வீட்டில் சொல்லி, திருமணம் செய்துகொண்டால் தங்கும் பிரச்சினை இருக்காது’’ என்கிறார் லியோனி.

பாவம்… எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார் லியோனி…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x