Published : 17 Oct 2019 07:16 PM
Last Updated : 17 Oct 2019 07:16 PM

குர்து இன மக்கள் குடும்பம் குடும்பமாக சிரியாவிலிருந்து வெளியேற்றம்: கடும் ராணுவ படையெடுப்பு

பெர்டார்க், பிடிஐ

வடக்கு சிரியாவில் எண்ணற்ற துருப்புகள் குர்து இனமக்கள் வீடுகளை நோக்கி படையெடுத்ததையடுத்து சிரியாவிலிருந்து குர்து இனமக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

ஈராக்கில் இவர்கள் சக குர்து இனமக்களுடன் இணைந்து எண்ணற்ற குண்டு வீச்சு, ராக்கேட் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் அங்கு சென்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக துருக்கியப் படைகள் நாசம் விளைவிக்கும் ராஸ் அல் அய்ன் பகுதியில் சூழ்நிலை தாங்க முடியாத அளவுக்குச் சென்று விட்டதாக அங்குள்ள மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

துருக்கிய படைகள் மட்டுமல்லாது அங்காரா அதரவு சிரியா போராளிகள் மற்றும் அரசுப்படைகளும் இப்பகுதியை முற்றுக்கையிட்டு வருகின்றன.

மேலும் ஐ.எஸ் தீவிரவாதிகளும், சிரியாவின் சுதந்திர ராணுவ போராளிப்படையும் ராஸ் அல் அய்னை விரைவில் ஆக்ரமிப்பார்கள் என்ற அச்சம் நிலவுவதால் குழந்தைகளையும் பெரியோர்களையும் காப்பாற்ற அங்கிருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

துருக்கியப் படையினர் குர்து இன மக்கள் வீடுகள் மீது குண்டு மழை பொழிவார்கள் என்ற அச்சம் அங்கு பெரிய அளவில் மக்களை கவலையடையச் செய்துள்ளது.

இந்த லட்சணத்தில் துருக்கியின் இந்த ராணுவ நடவடிக்கைக்கான சமிக்ஞைப் பெயர் “அமைதி ஊற்று”.

துருக்கியர்களின் வான்வழித் தாக்குதல் ஆர்ட்டிலரி குண்டு மழை ஆகியவற்றுக்கு எதிராக ராச் அல் அய்னில் குர்து போராளிகள் சுரங்க வலைப்பின்னல்களை அமைத்துத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர், ஆனால் இந்தத் தடுப்பு நீண்ட காலம் நீடிக்காது என்று அங்குள்ள அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

துருக்கித் தாக்குதலில் இந்த ஊரிலிருக்கும் மருத்துவமனை தாக்கப்பட்டது, இடிபாடுகளில் நோயாளிகளும் ஊழியர்களும் சிக்கியுள்ளனர் என்று மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

துருக்கித் தாக்குதலை நேரில் பார்த்த ஸுயெய்தா என்ற பெண்மணி கூறும்போது, “தெருக்களில் ரத்தக்களறியைப் பார்க்கிறோம். குழந்தைகள் தெருவில் உறங்குகின்றன. சாப்பிட ஒன்றுமில்லை, குடிநீர் இல்லை.” என்று நிலைமையை வேதனையுடன் தெரிவித்தார்.

துருக்கியின் ஒருவார கால இந்த தாக்குதலினால் இதுவரை 3 லட்சம் குடிமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குடிபெயரும் மக்கள் இடமில்லாமல் ஆங்காங்கே அலைந்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x